மன்னிப்பிலும் வலிய தண்டனை வேறேதும் இல்லை என்பது என் ஆணித்தரமான கருத்து.ஒருவன் தன் குற்றவாளியை முழுமனதாய் மன்னிக்கும் போதே அக்குற்றவாளி ஆனவனுக்கு தன் குற்றத்தை உணர்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.மாற்றாக அவனைத் தண்டிக்கும் போது,குற்றவாளி முதலில் குற்றம் செய்கின்றான்,தண்டிப்பவன் இரண்டாவதாய்க் குற்றம் செய்கின்றான்.மொத்தத்தில் இருவருமே நீயாயவாதிகள் இல்லை.
தங்களை நீதிமான்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு,மற்றவர்களைத் தண்டிக்க முண்டியடித்துக் கொண்டிருப்பவர்களின் அக்கிரமங்கள்,இன்னும் வெளியுலகத்திற்குத் தெரியவில்லை.அவ்வளவுதான்.இவ்வுலகத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளுக்குள் இருப்பவர்களை விடக் கொடூரமான குற்றவாளிகள் அதிகாரம் என்ற போர்வையையும்,பண பலம் என்ற முகமூடியையும் அணிந்து கொண்டு வெளியில் இருந்து நியாயம் விசாரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.அது தான் இந்த உலகத்தில் நீதி.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரண்டு வகை.ஒன்று தூண்டுதலின் பேரிலோ,நேரிடையாகவோ குற்றம் செய்தவன்,மற்றையது அவனது காலக் கொடுமையில் அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டவன்.இவர்கள் இருவரையும் வேறு பிரிப்பது என்பது அசாத்தியமானது.ஏனெனில் தீர்ப்பு வழங்கப்படுவது முன் வைக்கப்படும் சாட்சியங்களிலும்,வக்கீலின் வாதத்திலுமே.இதைத்தான் அண்ணா அழகாகச் சொன்னார்,”சட்டம் ஒரு இருட்டறை,அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு”என்று.ஆனால் இங்கு பெரும்பாலும் பணத்திற்காக வாதாடுபவர்களே வக்கீல்கள்.சாட்சியங்கள் என்பது அதிகாரத்தில் உள்ளவர்களின் கைவினைப் பொருள்.மொத்தத்தில் நீதி என்பது போலியாய் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் தராசுதான்.
இன்று தமிழ் நெஞ்சங்களில் புயலாய் வீசிக்கொண்டிருக்கும் சம்பவம்,முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோரின் தூக்குவிவகாரம்.21 ஆண்டுகளாக கேள்விக்குறியுடன் இருக்கும் மர்மத்துக்கு இவர்களின் தூக்கின் மூலம் விடைகாண முயல்கின்றார்கள். 21 ஆண்டுகள் வெளியுலகத் தொடர்பின்றி, தங்கள் இளமையைத் தொலைத்து, மனதளவில் இறந்தவர்களின் உயிரைப் பறிப்பதன் மூலம் இவர்கள் அடைந்துவிடப்போகும் வெற்றிதான் என்ன??
உண்மையில் குற்றம் செய்தவன் என்றால்,தன் பாவத்தின் சம்பளமாக மரணத்தை எண்ணி மகிழ்வாய் இந்தப் பூமியில் இருந்து விடைபெறுவான்,ஏனெனில் மனிதனின் தண்டனையைப் பார்க்கிலும் அவனின் மனச் சாட்சியின் தண்டனை மகாகொடியது.ஆனால் அநியாயதிற்கு பழி சுமத்தப் பட்டவனோ தன் நியாயத்தை வெளிப்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் அல்லவா விடைபெறப்போகிறான்.
ஒருவன் குற்றவாளியோ அல்லது நிரபராதியோ,ஆனால் அவனுக்கு வழங்கப் படும் மரணதண்டனையானது,அவனுக்கு வழங்கப் பட்ட தண்டனையல்ல.ஏனெனில் அவன்தான் அதை அனுபவிப்பதற்கு இவ்வுலகில் இல்லையே.மொத்தத்தில் அந்தத் தண்டனையை அனுபவிக்கப் போவது அவனை நேசித்த உறவுகளே.
மரணதண்டனை எதிர்ப்போம்,மனித நேயம் காப்போம்.
21 comments:
கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்.....ஒரு உயிரை மதிக்க பழக வேண்டும்....
thanks friend nice your story .....
நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள், உங்கள் நடைமுறை வாழ்க்கையில் உங்களுக்கு தீங்கிளைத்தவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அவர்களுக்கு நன்மையே செய்து வந்துள்ளீர்களா? பாதிக்கப் பட்டவர் நீங்களாக இருந்தால் குற்றவாளியை மன்னிப்பீர்களா? இல்லை வெறும் வாய்ச் சொல் வீரரா நீங்கள்? தற்போது தூக்கு தண்டனையை எதிர்நோக்கும் மூன்று பேரைப் பற்றி நான் சொல்லவில்லை, குற்றம் புரிபவர்களுக்கு கொடுக்கப் படும் தண்டனை எப்படி இருக்க வேண்டுமென்றால் அதைப் பார்த்து அடுத்து யாரும் அதே தப்பை செய்யக்கூடாது. [அரபு நாடுகளில் வழங்குவது போல]. ஆனால், இங்கே நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது, யாருக்கும் பயமில்லை. மக்கள் குற்றவாளிகளிடமிருந்து அவதிப் படாமல் வாழ்வார்கள் என்றால் எந்த தண்டனையும் மோசமில்லை.
@ஆகுலன்நிச்சயமாக...
@stalinYou are Welcome.
@Jayadev Das
என்னை நீதிமான் என உங்களுக்கு நிரூபிக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்தவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கச் சொல்லி நான் இங்கு சொல்லவில்லையே!
குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படத்தான் வேண்டும்.ஆனால் ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க இன்னொரு மனிதனுக்கு உரிமை இல்லை என்பதே என் வாதம்.காரணம் சட்டத்தில் அத்தனை ஓட்டைகள் உள்ளன.நீதி என்பது பணத்துக்கும்,அதிகாரத்திற்கும் அடி பணியக்கூடியது.
உங்கள் கருத்துப்படி அரபு நாடுகளில் மரணதண்டனை வழங்கப்படுவதால்,அங்கு மக்கள் குற்றமே செய்யவில்லையா???
\\குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படத்தான் வேண்டும்.ஆனால் ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க இன்னொரு மனிதனுக்கு உரிமை இல்லை என்பதே என் வாதம்.\\ அதாவது ஒரு குற்றவாளியால் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப் படுவதைப் பற்றி இந்த மனித உரிமையாளர்களுக்கு கவலை இல்லை, ஆனால் அவன் கைதான பின்னர் அவனை எப்படி எப்படி எல்லாம் நோகாமல் சவுகரியமாக நடத்த வேண்டும் என்று பாடம் எடுப்பதற்கு தவறாமல் ஆஜராகி விடுவீர்கள். இது இங்க மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் நடக்கிறது. காரணம் பாதிக்கப் பட்டது நீங்கள் இல்லை. கொலையுண்டவர், கற்பழிக்கப் பட்டவர் உங்கள் சொந்த பந்தகலாக இருந்து, உங்கள் பொருள் களவாடப் பட்டிருந்து, குற்றவாளியை மன்னியுங்கள், ஒப்புக் கொள்கிறேன், நீங்கள் நீதிமான்கள் மட்டுமல்ல அல்ல நீதிப் புலிகள் கூட என்று.
\\உங்கள் கருத்துப்படி அரபு நாடுகளில் மரணதண்டனை வழங்கப்படுவதால்,அங்கு மக்கள் குற்றமே செய்யவில்லையா???\\ அப்ப தற்போது இருக்கும் தண்டனைச் சட்டங்களையும் நீக்கி விடலாமா? என்ன வாதம் வைக்கிறோம் என்று உணர்ந்துதான் வைக்கிறீர்களா?
@Jayadev Dasகுற்றத்திற்கான களம் உருவாவதைத் தடுப்பதன் மூலமே குற்றத்தைக் கட்டுப்படுத்தலாமே ஒழிய,மரணதண்டனையால் அல்ல.இந்தக் குற்றத்திற்கான தண்டனை உண்மையான குற்றவாளிக்கு மட்டுமா வழங்கப்படுகின்றது.எத்தனை நிரபராதிகள் இதில் வலிந்து திணிக்கப்படுகின்றார்கள்.உம்முடைய உறவினர் ஒருவர் இவ்வாறு அபாண்டமாய்ப் பழி சுமத்தப்பட்டு பலியாடாக்கப்பட்டால்,நீர் வாய் பொத்திக்கொண்டு இருப்பீரா??
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் மரணதண்டனை இல்லையே??அதனால் அங்கு நித்தம் நித்தம் கொலைகள் நடக்க வில்லையே.
//குற்றவாளியை மன்னியுங்கள், ஒப்புக் கொள்கிறேன், நீங்கள் நீதிமான்கள் மட்டுமல்ல அல்ல நீதிப் புலிகள் கூட //
அப்பாவித் தமிழனுக்கு ஆதரவளித்தால் அவன் புலி;என்ன அருமையான விளக்கம்??
@அருள்வருகைக்கு நன்றி.பார்த்து எழுதுங்கள்,தாஸ் போன்றவர்கள் உங்கள் மேல் கோவம் கொள்ளப்போகிறார்கள்.
\\எத்தனை நிரபராதிகள் இதில் வலிந்து திணிக்கப்படுகின்றார்கள்.உம்முடைய உறவினர் ஒருவர் இவ்வாறு அபாண்டமாய்ப் பழி சுமத்தப்பட்டு பலியாடாக்கப்பட்டால்,நீர் வாய் பொத்திக்கொண்டு இருப்பீரா??\\ அப்போ சரி செய்ய வேண்டியது நீதித் துறையை, தண்டனைச் சட்டங்களை அல்ல. இன்றைக்கு கொலையாளியை கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் பிறரால் அநியாயமாக கொள்ளப் படுபவது தவிர்க்கப் படும், ஒரு கொலைகாரனின் உயிரையே பறிக்க யாருக்கும் உரிமையில்லை என்று நீங்கள் சொல்வது போலவே, கொலைகாரனுக்கும் அந்த உரிமை இல்லை.
\\பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் மரணதண்டனை இல்லையே??அதனால் அங்கு நித்தம் நித்தம் கொலைகள் நடக்க வில்லையே. \\ அங்க லஞ்ச லாவண்யம் கூடத்தான் இல்லை, இங்கே ஏன் அது தலை விரித்துத் தாண்டவமாடுகிறது? இடம் பொருள் ஏவல் பொறுத்துதான் தீர்வைப் பார்க்க வேண்டுமே தவிர எல்லோருக்கும் ஒரே தீர்வு என்பது சரியாகாது.
\\அப்பாவித் தமிழனுக்கு ஆதரவளித்தால் அவன் புலி;என்ன அருமையான விளக்கம்?? \\ இவர்கள் அப்பாவிகள் என்னும் பட்சத்தில் தண்டனை பெறக்கூடாது என்பதே என் கருத்து. நீங்க நீதித் துறையைத்தான் ரிப்பேர் செய்யணும்.
\\தாஸ் போன்றவர்கள் உங்கள் மேல் கோவம் கொள்ளப்போகிறார்கள். \\ நீதி தவறாது ஆண்ட மன்னர்கள் குற்றம் புரிந்தவர்களை பொதுமக்கள் பார்வையில் கழுவில் ஏற்றியதாக தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அவர்கள் முட்டாள்கள் அல்ல. கொலைகாரனுக்கு கருணை காட்டிக் கொண்டிருந்தாள் இன்று கொலை செய்யத் திட்டமிட்டிருப்பவனும் துணிந்து கொலையில் ஈடுபடுவான், அதைத் தவிர்க்க குற்றம் செய்தவனை கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென்பது என் கருத்து. நீங்கள் கொலை செய்துவிட்டு நிர்ப்பவனைப் பற்றி கவலைப் படுகிறீர்கள், நான் பாதிக்கப் படப் போகும் அப்பாவிகளை நினைத்து கவலைப் படுகிறேன், மற்றபடி யார் மீதும் சேற்றை வாரியிரைக்குமஎன்னம் எனக்கில்லை.
@Jayadev Das
//இங்கே ஏன் அது தலை விரித்துத் தாண்டவமாடுகிறது?//
அதுதான் இங்குள்ள சட்டத்தின் குறைப்பாடு.இத்தகைய குறைபாடுள்ள சட்டத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு மரணதண்டனை வழங்கமுடியும்.அந்த மரணதண்டனை மட்டும் எப்படி நீதியானதாய் இருக்கும்???
@Jayadev Das
// ஒரு கொலைகாரனின் உயிரையே பறிக்க யாருக்கும் உரிமையில்லை என்று நீங்கள் சொல்வது போலவே, கொலைகாரனுக்கும் அந்த உரிமை இல்லை.//
நிச்சயமாக.அவன் உயிரோடு இருந்தால் தானே அவன் தண்டனையை அனுபவிப்பான்.அவனது உயிரைப் பறித்தால் அவனது குற்றதுடன் எவ்வித சம்பந்தமும் இல்லாத அவன் உறவுகள் அல்லவா ,தங்கள் வாழ் நாள் பூராக சமூகத்தின் வசையையும்,பழியையும் ஏற்கவேண்டும்.இது எவ்விதத்தில் நியாயம்??
ஆரோக்கியமான விவாதம் வரவேற்கப் பட வேண்டியதே.ஆனால் இது இத்தனை சங்கிலித் தொடராக நீள்வதில் உடன்பாடில்லை.உம்முடைய உணர்வுகளையும் நான் மதிக்கின்றேன்.
ஆயிரம் குற்றவாளிகள் சட்டத்தில் உள்ள ஓட்டையால் தப்பிக்கலாம்,ஆனால் ஒரு நிரபராதி அநியாயமாக தண்டிக்கப் படக்கூடாது.
9v பட்டரி வாங்கிக்கொடுத்தவனுக்கு மரணதண்டனை என்பது எந்த வகையில் நியாயம்??
பேரறிவாளனின் தாயின் கண்ணீரை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.அந்தத் தாய் செய்த பாவம் தான் என்ன???
// /பார்த்து எழுதுங்கள்,தாஸ் போன்றவர்கள் உங்கள் மேல் கோவம் கொள்ளப்போகிறார்கள்.// //
திருவாளர் தாஸ் நியாயமற்ற கருத்துகளை முன்வைக்கிறார்.
மனித உயிரை பறிப்பது எந்தவிதத்திலும் நியாயம் ஆகாது. அது கொலைக்குற்றவாளிக்கும் பொருந்தும். கொலை செய்வது குற்றம் எனும்போது கொலையாளியைக் கொல்வதும் குற்றம்தான்.
தூக்கு தண்டனையால் குற்றங்கள் குறையும் என்பது ஆதாரமற்ற, கற்பனையான வாதம். அப்படியெல்லாம் உலகில் எங்குமே நடந்தது இல்லை.
மற்றொருபுறம், இந்திய சட்டங்களில் உச்சபட்சமான தண்டனை என்பது தூக்கு தண்டனை என்று குறிப்பிடப்படவில்லை. "தூக்கு அல்லது ஆயுள் தண்டனை" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தூக்கும் ஆயுளும் ஒப்பீட்டளவில் ஒரே தண்டனைதான்.
அதுமட்டுமல்லாமல், தூக்கு தண்ட்னை விதிக்க மட்டுமே நீதிமன்றங்களுக்கு உரிமை உண்டு. அந்த தண்டனையை நிறைவேற்றும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை. அதேநேரத்தில், எந்த ஒரு தண்டனையையும் மன்னிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உண்டு.
நீதிமன்ற அதிகாரத்தின் படி விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, அரசாங்கத்திற்கு உள்ள அதிகாரத்தைக் கொண்டு குறைக்க கோரும் உரிமை மக்களுக்கு உண்டு.
இதனை எதிர்த்து தாஸ், சாமி, சோ எல்லாம் பேசுவது - வெட்டிப்பேச்சு!
@அருள்மிகவும் அழகான வாதம்.மிகவும் நேர்த்தியாக கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள்.நன்றி.
@அருள்
@malgudi
அன்பர்களே, நீங்கள் இரண்டு தனித் தனியான விஷயங்களை ஒன்றாகச் சேர்த்து குழப்பிக் கொண்டுள்ளீர்கள். அப்பாவிகள் தண்டிக்கப் படக்கூடாது, தற்போது தண்டனையை எதிர்நோக்கியுள்ள மூன்று தமிழர்கள் சட்டப் படி தவறு செய்யாதவர்கள் என்னும் பட்சத்தில் அவர்கள் தண்டிக்கப் படக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதே சமயம் மரண தண்டனை தேவையா இல்லையா என்றால், தேவை என்பதே என் கருத்து. ஒருத்தர் உயிரைப் பறிக்க யாருக்கும் உரிமையில்லை, அவர்கள் பிரிவால் தண்டனை பெற்றவனின் குடும்பம் தவிக்கும் என்று ஆதங்கப் படுகிறீர்கள். நல்லது தான். அதே சமயம் நம் நாட்டைக் காக்கும் ராணுவத்தினர் எண்ணற்றோர் போரிலும் எல்லையைக் காப்பதிலும் மரணமடைகிரார்களே, அவர்கள் குடும்பங்கள் அவர்களது பிரிவால் வாடுகின்றனவே, அதனால், ராணுவத்தில் மனிதர்களையே சேர்க்கக் கூடாது என்று சொல்வீர்களா ? சொல்ல மாட்டீர்கள், ஏனெனில் அவர்கள் உயிரை விட வில்லை என்றால், அவர்கள் குடும்பங்கள் வாழ்நாள் முழுவதும் அழவில்லை என்றால் நாட்டில் நீங்களும் உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியாய் வாழவே முடியாது. அதனால் அவர்களது மரணம் ஒரு பொருட்டாக மனித உரிமையாலர்களுக்குப் படுவதில்லை. ஆனால், கொலை கொள்ளை கற்பழிப்பு செய்பவன் உயிரைக் காக்கும் தெய்வங்களாக எங்கிருந்தோ வந்து விடுகிறீர்கள். இவர்களுக்கு வக்காலத்து வாங்குவது, எதிர் காலத்திலும் குற்றம் புரிபவர்களை ஊக்குவிக்கும் என்பது உங்கள் கண்களுக்கு ஏனோ புலப்பட மறுக்கிறது. உயிரைப் பறிப்பது கூடாதுதான், எனினும் பலரது உயிரைக் காக்க சில வீரர்களது உயிர் போனால் பரவாயில்லை என்று எண்ணுவது சரி என்றால், அதே காரணத்துக்காக கொலை, கொள்ளை, கற்பழிப்பவர்கள் உயிர் சட்டப் படி பறிப்பதில் தவறேயில்லை என்பது என் கருத்து.
@அருள்
Your thinking is very mean and cheap, I am sorry to say this, better come out of it.
@Jayadev Dasநண்பரே,உங்கள் கருத்திற்கு எதிரான கருத்தென்றால்,அது மலிவான கருத்து என்று பொருள் அல்ல.
@Jayadev Das
//அன்பர்களே, நீங்கள் இரண்டு தனித் தனியான விஷயங்களை ஒன்றாகச் சேர்த்து குழப்பிக் கொண்டுள்ளீர்கள்.//
நிச்சயமாக இல்லை.இந்தக் கட்டுரை ராஜீவ்காந்தி கொலைவழக்கை மையமாக வைத்தே எழுதினேன்.இங்கே இரண்டு விடயங்களும் ஒரு புள்ளியில் தான் சந்திக்கின்றன.முதலாவது அப்பாவிகள் தண்டிக்கப் படக்கூடாது,இரண்டாவது மரணதண்டனை தடைசெய்யப் படவேண்டும்.இங்கே நான் மிகவும் தெளிவாகச் சுட்டிக்காட்டிய விடயம் சட்டத்தில் உள்ள குறைபாட்டால் உண்மையான குற்றவாளியைஅடையாளம் காண்பது மிகவும் சிரமமானது.அதிலும் அரசியல் மிகுந்த இந்தச் சந்தர்ப்பத்தில்,முதன்மைக் குற்றவாளிகள் அனைவரும் இறந்த நிலையில்(நேரடிச் சாட்சிகள் இல்லை)அதற்க்கு சாத்தியம் இல்லை.இங்கே நான் எந்த இடத்திலும் கொலையை ஆதரிக்கவில்லை.அனைவரின் உயிரும் விலைமதிப்பற்றவையே.யாருக்கும் யாருடைய உயிரைப் பறிக்க உரிமை இல்லை என்பதே இங்கே முன் வைக்கப் பட்ட கருத்து.குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவரை சமூகத்தில் இருந்து நிரந்தரமாக பிரித்து வைப்பதே (ஆயுள்தண்டனை)அவருக்கான அதிகபட்சமான தண்டனையாக இருக்கவேண்டும்.உலகில் 58 நாடுகளில் மரணதண்டனை நடைமுறையில் உள்ள போதும் 95 நாடுகள் மரணதண்டனை முற்றாக நீக்கப்பட்டுள்ளன
Post a Comment