Saturday, June 11, 2011

மார்பகப்புற்று நோய் .............தொடர் கதை


காலைச் சூரியனின் ஒளி கண்ணாடி ஜன்னலுக்கூடாக ஊடுருவி அறை முழுவதும் ஒளியைப் பரப்பிக்கொண்டு இருந்தது.ஒளி முகத்தில் படரத்தொடங்க அரைக்கண் முழித்த தனு மணியைப் பார்த்தான்.மணி தன் போக்கிலே 6 ஐக் கடந்து சென்றுகொண்டிருந்தது.பதறியடித்துக்கொண்டு எழுந்தவன்,மறுபக்கம் திரும்ப மனைவி காவ்யாவும் மகள் துவாவும் எந்தவித சலனமும் இன்றி உறங்கிக்கொண்டிருந்தனர்.
சமையல் அறையை நோக்கி விரைந்தவன்,காஸ் அடுப்பிலே சூட்டைக் குறைத்து தண்ணியை வைத்துவிட்டு டாய்லெட் சென்றவன் வாயில் ப்ரஷ்யுடன் திரும்ப தண்ணியோ கொதித்து வழிந்துகொண்டிருந்தது.மூன்று கோப்பை காபியைப் போட்டுக்கொண்டு படுக்கையறை செல்ல காவ்யாவும்,துவாவும் இன்னும் எழுந்தபாடில்லை.

காப்பியை மேசையிலே வைத்துவிட்டு மெதுவாய் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டபடி “Good morning காவி! என்றான்.மெதுவாய் கரம் தூக்கியவள் அவன் தலையை மெதுவாய் கோதியபடி “தனு,இன்றைக்கு வேலைக்கு போறியா?என்றாள் கம்மிய குரலில்.ஏற்க்கனவே “நோ பே ,இன்னம் லீவ் எடுத்தால் சம்பளத்தை யோசிச்சுப்பார்?,என்றவாறே காப்பிக் கோப்பையை அவள் கையில் திணித்தான்.
பின் தூங்கிகொண்டிருந்த ஆறு வயது மகளை குண்டுக் கட்டாகத் தூக்கியவன்,அவளுக்கும் காபியைக் கொடுத்துவிட்டு,தன் காப்பியை ஒரு வாய் உறிஞ்ச வாசலில் பேக்கரி வானின் பாடல் கேட்டது.பேர்சை கையில் எடுத்துக் கொண்டு விரைந்தவன் காலைஉணவை வாங்கிக் கொண்டுதிரும்பியபின்பும் இருவரும் காப்பிக் கோப்பையுடனே இருந்தனர்.
ஏய் துவா?என்னடி பண்றே?என்று அதட்டியவாறே அவளை குளியல் அறைக்கு இழுத்துச் சென்று குளிப்பாட்டிக் கூட்டிவர காவ்யா எழுந்து உணவைத் தட்டில் வைத்துக் கொண்டிருந்தாள்.அப்பொழுது அவள் கை நடுங்க ஒரு தட்டு கீழே விழுந்து ஓசையுடன் ஆரவாரம் பண்ணியது.
பதறிக் கொண்டு ஓடிவந்தவன்,காவி! யாரம்மா இதெல்லாம் உன்னைப் பண்ணச் சொன்ன?என்று கேட்ட படி அவளை அறைக்குள் அழைத்துச் சென்று கட்டிலில் உட்காரவைத்தான்.அவள் “ஏண்டா,என்னை ஒன்றுமே செய்ய விடுகிறாய் இல்லை என்று முறைத்தாள்.அவள் முடி உதிர்ந்த தலையை மெதுவாய் வருடியவன்,நீ இப்ப எனக்கு மனைவி இல்லை,மகள்.அப்படி இருக்க உன்னை நான் எப்படி வேலைசெய்ய விடுவேன்,என்ற வாறே மார்போடே அணைத்தான்.அவள் உதடை கடித்துக்கொண்டு கண்ணை இறுக்க மூட,அவள் வலியை உணர்தவன் அணைப்பைத் தளர்த்தினான்.
பக்கத்திலே மகள் துவாயைச் சுற்றிக்கொண்டு,தாயின் கரத்தைப் பற்றிக்கொண்டு நின்றாள். “அடியே துவா,நீ இன்னும் டிரஸ் பண்ணவில்லையா?என்ன பிள்ளடி நீஎன்று செல்லமாய் கோவித்துக்கொண்டு அவளுக்கு சீருடையை மாற்றி விட்டான்.காவி!இவளுக்கு தலையைப் பின்னி விடுடி.இன்னும் அது மட்டும் தான் சரியாய் வரமாட்டாங்குது என்றவாறே சமையல் அறையை நோக்கி நகர்ந்தான்.
மகளுக்கு சாப்பாட்டைப் போட்டுக் கொண்டுவந்து அவளிடம் நீட்ட,காவ்யா வாங்கி ஊட்டநினைத்தாள்.மனைவியைத் தடுத்தவன்,காவி! அவளாகவே பழகட்டும்.எப்பவுமே நாம பக்கத்தில இருந்து பண்ணமுடியுமா?என்றான் தொண்டையைச் செருமிக்கொண்டு.காவ்யாவின் கண்ணில் திரண்ட கண்ணீரைப் பார்த்தவன்,தன் வார்த்தை தடுக்கிவிட்டதை உணர்ந்து,சீக்கிரமாய் அறையை விட்டு வெளியேறினான்.
கசங்கி இருந்த சட்டையையும் பொருட்படுத்தாமல் மாட்டிக்கொண்டவன்,தன்னை அலுவலகத்துக்குச் செல்ல தயார் படுத்திக்கொண்டான்.அப்பொழுது வாசலில் மகளைஏற்றிச் செல்லும் ஆட்டோ கோன் சத்தம் கேட்டது.மகளின் புத்தகப் பையைச் சரி பார்த்துக்கொண்டே,லஞ்ச் பாக்ஸ் ,தண்ணீர் போத்தலையும் அதற்குள் திணித்து துவாவின் முதுகில் மாட்டிவிட்டான்.வாசலைநோக்கி ஓடியவள் ,திரும்பி தாய் இருக்கும் அறையை நோக்கி ஓடினாள்.பின் தன்னை நோக்கி ஓடிவர என்னம்மா? என்றான் கோவமாய்.அப்பா அவ்வா,என்றவாறே முகத்தைத்திருப்பினாள் அந்தப் பிஞ்சு.மகளை முத்தமிட்டவன்,தூக்கிச் சென்று ஆட்டோவில் உட்காரவைத்தான்.அப்பொழுது வாசலில் காத்திருந்த கடுப்புடன் தன்னைப் பார்த்த ஆட்டோ டிரைவரை ,தோளில் தட்டிச் சமாதானப்படுத்திவிட்டு உள் நுழைந்தான்.
காவ்யா கட்டிலில் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.கரண்ட் ட்ரீட்மெண்ட்இக்குப் பின்பு இப்பொழுது தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலைமுடி முளைக்க ஆரம்பித்து இருக்கிறது.வார்த்தையால் சொல்லாத வேதனைகள் எல்லாம் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.அகற்றப் பட்ட மார்பு அவள் பொலிவைக் கெடுத்தது.தேவதையாகத் தெரிந்த தன் காதலி தன் மனைவியாகி ஏழு ஆண்டுகளிலே,இப்படிக் கோலம் மாறிப் போனதை நினைக்க அவனுக்கு நெஞ்சு கனத்தது.இந்தக் காதல் உடல் சம்பந்தப்பட்டது இல்லை,உள்ளம் சம்பந்தப்பட்டது என்பதை அவன் உணர்வு பூர்வமாக உணர்ந்தது, அவள் மார்பகப்புற்று நோய்க்கு இலக்காகி கட்டிலில் விழுந்த பின்பு அவள் மேல் இருந்த காதல் பிரவாகமாக அவனுக்குள் பொங்க ஆரம்பித்ததில் இருந்துதான்.
காவி ,நான் வேலைக்குப் போறேன்,குளுசையை மறக்காமல் போடு,சாப்பாட்டை மிச்சம் வைக்காமால் சாப்பிடு.நான் மதியம் வருவேன் என்றவாறு வாசலை நோக்கி நடந்த தனுவை அவள் உணர்வுகள் காந்தப் புலமாய் இழுப்பதை உணர்ந்தான்.
புற்றுநோய் தொடரும்.........
குறிப்பு:நீண்ட காலமாகத் தொடர் கதை எழுதவேண்டும் என்று ஆசை.ஆனால் இப்பொழுது இருக்கும் வேலைப் பளுவில் இது சாத்தியமாகுமோ? என்று தெரியவில்லை. என்றாலும் முயன்றுதான் பார்த்துவிடுவோம் என்று கால்வைத்து இருக்கின்றேன்.வாசிப்பவர்களின் பிரதிபலிப்பைப் பொறுத்தே இதைத் தொடரும் எண்ணம் இருகின்றது.அதனாலே ஆரம்பமே நிறைவாயும் அமையும் வண்ணம் முடித்துள்ளேன்.

6 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

படிக்கும் போதே மனம் கனக்கின்றது சகோ...
தொடருங்கள்

Unknown said...

@தோழி பிரஷா( Tholi Pirasha)வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி.

விஜயகுமார் ஐங்கரன் said...

மிகவும் அருமையான பதிவு நண்பா அத்தோடு தொடர்ந்து எழுதுங்கள் நண்பா

Unknown said...

@விஜயகுமார் ஐங்கரன்
நன்றி Boss.

குதூகலக்குருவி said...

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் ..

Unknown said...

@குதூகலக்குருவி
கண்டிப்பாக,இப்பொழுது சற்று வேலைகள் அதிகம்.விரைவாகத் தொடர முயற்சிகின்றேன்.

Post a Comment