Thursday, April 29, 2010

காதல் பிரிவு .....(கவிதை)


அன்று மார்கழி மாத பின்நேரம்
அங்கொன்றும் இங்கொன்றுமாக கருமேகம்
ஆசையாய் தழுவியது கூதல் காற்று
ஆனாலும் ஏற்க மறுத்தது என மனசு
 
இதயம் பூரா நிறைந்திருந்த என்காதல்
இயக்கம் அற்றுப்போய் விட்டதே
ஈ அவளை தீண்டினாலும் வலிக்கும் எனக்கு
ஈவிரக்கம் இல்லாதவன் அல்லவா கணவன் ஆகிறான்
உள்ளத்தின் அன்பை உதட்டால் உணர்த்தத்தெரியவில்லை
உண்மைகள் அவளுக்கு புரியவும் இல்லை

ஊமையாய் அழுகிறேன்
ஊஞ்சலில் அவள் அவனுடன்
என்ன காரணம்
எனக்கு வேலையில்லை
ஏவல் செய்வதே அவன் வேலை
ஏற்ற கணவன் அவன் என்கிறாள் அவள்
ஐக்கியம் ஆகிறதே அவன் உறவு
ஐயோ அவள் எனக்கு கிடைக்க மாட்டாளா?

ஒருத்தியே என் மனதில்
ஒடிந்தாலும் விட மறுக்கிறது முட்டாள் மனசு
 ஓருயிராய் இருப்போம் என்றாயே
ஓடிவிட்டாயே பணம் என்றவுடன்
            (நான்)

    
(அவள்)              (அவன்)

.................ஆயுத எழுத்து......................... 

 (என்னுடைய கன்னி முயற்சி.பிறரின் உற்சாகமே எழுத்தின் ஆர்வத்தை அதிகரிக்கும்.உங்கள் கருது என்னைச்சீர்படுத்த உதவும். )

Tuesday, April 27, 2010

முகமாற்றம்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.ஹிட்லர் முகத்த பார்த்தா அப்படி தெரியுதாங்க?,ஆனால் இடி அமீனுக்கு இது பொருத்தம் என்பது உண்மைதான்.
கீழே உள்ள படங்கள் உள்ளுணர்வுகள் முகத்தில் எப்படி பிரதி பலிகின்றன என்பதை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன.

 இந்தப்படத்தை மிக நுணுக்கமாக அவதானித்தாலே அவரது முக மாற்றங்களை அவதானிக்க முடியும்.ஏனெனின் அவர் இந்த முக பாவங்கள் யதார்த்தமாக வெளிப்படுபவையே.













இந்த இரண்டு தொகுப்புக்களும் யதார்த்தமானவை அல்ல.ஆனாலும் எத்தனை விதமான பாவனைகள்.




 பூனை கூட எப்படியெல்லாம் போஸ் குடுக்குது பாருங்களேன்.
 நடிகர் rowan atkinson (இப்படி சொன்ன புரியாதுங்க,அதாங்க நம்ம Mr.Been)அவர்களுடைய முகபாவங்கள் உலகப்பிரசித்தம்.எப்படி தூள் கிளப்பிருகார் பாருங்க.




எச்சரிக்கை :கண்ணாடி முன்னாடி இப்படி எல்லாம் பண்ணிப்பார்க்க கிளம்பாதிங்க.

Monday, April 26, 2010

புரியாத புதிர்

விடுமுறைக்கு வீடு வந்து விட்டு ஊரைவிட்டுத் திரும்பும் ஹரிக்கு ஒவ்வொரு தடவையும் வீட்டைவிட்டு பிரியும் மணமகள் நிலைதான்.என்னதான் தைரியமாய் இருந்தாலும் அம்மாவிடம் போய் வருகின்றேன் என்று சொல்லி அம்மாவின் முகத்தை பார்த்தால் அனைத்து தைரியமும் அவர் கண்ணில் இருந்து வரும் கண்ணீரில் கரைந்தே விடும்.இது இன்று நேற்று அல்ல,எப்பொழுது முதல் தடவையாய் வீட்டைவிட்டு கல்லூரிக்கு சென்றானோ அன்றைக்கு என்ன நடந்ததோ அதே சம்பவம்தான் ஒவ்வொரு விடுமுறை முடிவின் போதும்.
அம்மா பக்கத்தில் நின்று பிரார்த்தித்து விட்டு உச்சிமொந்தாள்.ஹரிக்கு உள்ளுக்குள் பிரவாகம்,ஆனால் வெளிக்காட்டாமல் “அம்மா,இப்பொழுது தான் வேலையில் சேர்ந்து இருக்கிறன்.இப்பவே அடிக்கடி லீவு எடுத்தா நல்லாவா இருக்கும்.வார மாசம் எப்படியும் வந்திட்டுதான் போவன்.நீ தைரியமா இரும்மா என்று சொல்லி தன் தைரியத்தை அடகு வைத்து விட்டுச் செல்கிறான் புகையிரத நிலையம் நோக்கி.

அன்றைக்கு வண்டிக்குள் பெரிதாக சனம் இல்லை,அதனால் ஹரி ஜன்னல் ஓர இருக்கையை கைப்பற்றிக்கொண்டான்.வழமையாக வரும் நண்பர் பட்டாளம் கல்லூரிப்படிப்போடு பிரிந்துவிட்டனர்.இப்போதெல்லாம் ஹரிக்கு வண்டியில் நண்பர்கள் “ஐப்பொட் + “கற்பனை” +”தூக்கம்.
வண்டியில் ஏறியதில் இருந்து அதே ஒழுங்கில் நண்பர்களுடன் சங்கமிப்பான்.
ஏறியவுடன் பாட்டைக்கேட்கத் தொடங்கியவனுக்கு “அவள் அப்படியொன்றும் அழகில்லை... “பாடல் தனக்கொரு காதலி இல்லையே என பொருமவைத்தது.அடுத்ததாக ஒலித்த “உன் பெயரை சொல்லும்போது...பாடல் ஏக்கத்தை ஏணியில் ஏற்றிக்கொண்டு இருக்கையில் “Excuse me” என்ற ரிங் டோன் கண்ணை திறக்க வைத்தது.எதிரே அழகுப்பதுமையாக ஒரு பெண்.இடம் பிடிபதற்க்காக அவசரப்பட்டு வந்திருக்க வேண்டும்.முகத்தில் வேர்வைத்துளிகள்,சுவாசத்தில் ஒரு வேகம்.அவள் ஏதோ கேட்டது போன்று தோணவே ஹரி காதில் மாட்டி இருந்த ஹெட் செட்டைக் கழற்றாமல் என்ன என்றான்.அவள் ஒரு அழகி மட்டும் அல்ல,புத்திசாலியும் கூட.அவள் காதில் மாட்டி இருந்ததை அகற்றும் படி அழகாகவே பாவனை செய்தாள்.அந்தப் பாவனையே ஹரிக்கு ஸ்ரீதேவியை நினைவூட்டியது.பொதுஇடங்களில் பேசும் போது கூட ஸ்பீக்கரை காதில் மாட்டிக்கொண்டோ அல்லது ஒன்றை மட்டும் கழற்றிப் பேசி பலரின்(நடத்துனர் பலர் அடக்கம்) கடுப்பைக்கிளறிய அவன் அவள் அழகி என்ற ஒரே காரணத்திற்க்காக உடனே கீழ்ப்படிந்தான்.அவள் மெதுவாக “உங்களுக்கு முன் சீட்ல யாரும் இருக்கின்றான்களா? என்றாள்.(இருந்தாலும் இல்லையே என்றுதான் சொல்லி இருப்பான்.)யாரும் இல்லை உட்காருங்க என்றான்தன் சொந்த ஆசன உருமையில்.

பரஸ்பரம் புன்னகைகள் பரிமாறின.அவனது கேள்விகளுக்கு அவளும் புன்னகையுடன் பதில்களை சொல்லி அவனது எண்ண ஓட்டத்தை வேகப்படுத்தினாள்.அவளது பதில்களை கவிதைகளை கேட்பதைப் போன்று கேட்டுக்கொண்டு இருந்தவன் திடீர் என ஒரு கேள்வியை கேட்க முனைகையில் அவனது பாக்கட் அதிர்ந்தது,செல்போனில் அவனது வீட்டு இலக்கம் விழுந்தது.கட் பண்ணி பாக்கட்டுக்குள் திணித்தான்.அடுத்த கேள்வியை அவன் தயார் செய்கையில் மீண்டும் அழைப்பு.மற்றப்பக்கம் திரும்பி செல்போனை ஆப் செய்தான்.மீண்டும் அதே கேள்வியை அவளிடம் அவன் கேட்க நினைக்க “ஹே சுஜா ,சீட் பிடிச்சிட்டீயா?நான் ஒவ்வொரு பெட்டியா தேடிட்டு வாறன் என்றான் ஹரியின் வயதொத்த வாலிபன்.கையில் இருந்த அப்பத்தை காகம் பறிச்சது போல இருந்தது ஹரிக்கு.வந்தவனுக்கு அவள் ஹரியை அறிமுகம் செய்து வைத்தாள்.அவன் அதை பெரிதாய் கண்டு கொள்ளாமல் அவளுடன் பேச்சைத்தொடந்தான்.
ஹரிக்கு அவர்களது பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பை ஏற்றிக்கொண்டு இருந்தது.பின்பு தன்னைத்தானே சமாதானப்படுத்தி சகஜ நிலைக்கு வந்து விட்டான்.அந்த நிலையில் தான் தான் ஆப் செய்த போன் ஞாபகம் வந்தது.போனை ஒன் செய்தவன் வந்த மிஸ் கால் அலட்டைப் பார்த்து மிரண்டே விட்டான்.உடனே வீட்டுக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.அழுது கொண்டே அம்மா அழைப்பை பெற்றுக்கொண்டாள்.அம்மா பேசத்தொடங்க அவனை மீறி கண்ணீர் தரை தொட்டது.நீண்ட போராட்டத்தின் பின் பொய் வாதங்களை முன் வைத்து அம்மாவை சமாதானப்படுத்தினான்.என்றாலும் அவனது குற்ற உணர்வு அவ்வளவு சீக்கிரம் அவனை மன்னிக்கவில்லை.
அவனுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த அவர்கள் தங்கள் தரிப்பிடத்தில் எழுந்தார்கள்.அவள் அவன் முன்னால் இருந்ததற்கு தடயமாக ஹரியை நோக்கி ஒரு புன்னகையை விட்டுச்சென்றாள்.ஆனால் அவன் அவளிடம் கேட்க நினைத்த கேள்விக்கான விடை அவனுக்கு இன்னமும் கிடைக்கவில்லை.
இதாங்க அவன் கேட்க நினைத்த கேள்வி,நீங்க யாரையாச்சும் காதலிக்கின்றீன்களா?.
ஏனென்றால் அவன் பார்வையில் அவர்கள் காதலர்கள்,ஆனால் அவர்கள் பேச்சில் அவர்கள் நண்பர்கள்.

Wednesday, April 21, 2010

இளையராஜாவும் பின்னணி இசையும்


ஆங்கிலப்படங்களில் பின்னணி இசைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஏனோ தமிழ் படங்களில் கொடுக்கப்படுவதில்லை.காரணங்கள் பல.ஆனால் அந்த விதிமுறைக்கு விதிவிலக்கு நம்ம இளையராஜா சார்தான்.அனைத்து உணர்வுகளையும் வார்த்தையாலும் உடல்மொழியாலும் வெளிப்படுத்தமுடியாது.அத்தகைய காட்சிகளில் இளையராஜா அவர்கள் பின்னி இருக்கும் இசைக்கோர்வை அதில் நடிக்கும் நடிகர்களை மிஞ்சி விட்டது பலதடவை.
எனக்குப்பிடித்த அத்தகைய இசைவடிவங்கள்.
1. மௌனராகம் படத்தில் மோகன் ரேவதியின் மனப்போராட்டத்தை நாமும் அனுபவித்ததற்கு இந்த இசை பிரதான காரணம்.



2.
பாலு மகேந்திரா அவர்களால் இயக்கப்பட வீடு திரைப்படத்தில் வரும் இந்த இசையும் எம் இதயத்தினுள் சென்று சுருதி மீட்டுவிட்டே செல்லும்.(இயக்குனர் பாலா அவர்களிடம் நீங்கள் எது போன்ற படங்களை இயக்க விரும்புகின்றீர்கள் எனக்கேட்ட போது அவரது பதில் இந்தத்திரைப்படமே.)




3. ரெட்டைவால் குருவி திரைப்படத்தில் தலைப்பில் வரும் இந்த இசை மனதிற்குள் சந்தோசத்தை கண்டிப்பாக பரவவிடும்.




4. தளபதி படத்தில் ரஜினி தாயன்புக்கு ஏங்கும் காட்சியில் ராஜாசார் அவர்கள் எம் நெஞ்சை கசக்கியே எடுத்திருப்பார்.அப்படி ஒரு உணர்வு பூர்வமான இசை.


5.
சோகத்தை சொல்ல மட்டும் அல்ல ,நகைச்சுவைக்கும் சூப்பரா பண்ணியிருப்பார்.எப்ப பார்த்தாலும் திகட்டாத கரகாட்டக்காரன் நகைச்சுவையில் அந்த இசையும் சேர்ந்து கிண்டல் பண்ணும்.





6. BraveHeart  படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைக்கவில்லை.ஆனால் அந்தக்காட்சியோடு அவரது இசை அபரிதமாக ஒத்துப்போகின்றது.இந்த இசை இடம்பெற்றது “அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில்.
(முதலில் தவறாகக் கூறியமைக்கு மன்னிக்கவும்.தவறைத் திருத்த உதவிய ஷியாம் அவர்களுக்கு நன்றி.)








7. இசை மேதை பீத்தோவன் ,மொசார்ட் போன்றவர்களுக்கு ராஜா சார் எந்த வகையிலும் சளைத்தவர் இல்லை.இதைக்கொஞ்சம் கேட்டுப்பாருங்களேன்.






அந்த இசைக்கடலில் இருந்து சில துளிகள்.ஆனால் தேன் துளிகள்.

Saturday, April 17, 2010

சார்லி சாப்ளின்


நேற்று சார்லி சாப்ளின் அவர்களின் பிறந்த தினம்.உலக சினிமா எனும் பாதையில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் பயணித்தார்கள் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அவர்களில் சார்லி சாப்ளின் அவர்களின் பாதச்சுவடே இன்றும் தெளிவாகத் தெரிந்து கொண்டிருகின்றது என்பது அவரின் சாதனையின் வெளிப்பாடே.ஒரு கருத்திற்கு உலக சினிமாவை திரைப்படமாக எடுத்தால் அதில் நகைச்சுவை நடிகராக சார்லி சாப்ளின் அவர்களையே தெரிவு செய்யவேண்டும்.
1889 ம் ஆண்டு 16 ம் திகதி இரவு 8 மணிக்கு அந்த அழகிய புன்னகை ஹென்னா என்ற ஏழையின் வயிறில் இருந்து பூமியை வந்தடைந்தது.

குடிகாரத் தந்தை அவரது தாயை விட்டுபிரிந்து சென்றமை அவருக்கு குழந்தைப் பருவத்திலையே வறுமையின் வலியை கற்பிக்க ஆரம்பித்தது.மது விடுதியில் பாடுவதே அவரது தாயின் தொழில்.அதுவும் காலப்போக்கில் அவளை கைவிட்டது. சார்லி சாப்ளினின் அவர்களின் முதல் கலையுலக அறிமுகமும் அதே மது விடுதியில் தான்.தனது ஆறு வயதில் தாய் தொண்டை கட்டி பாடமுடியாமல் அவமானப்பட்டுக் கொண்டு நிற்கையில் யாருமே எதிர்பார்த்திராத வண்ணம் மேடை ஏறிய அந்த குழந்தையின் வினோத நடனம் போதையில் இருந்தவர்களையும் விசில் அடிக்க வைத்தது.
அவமானங்கள் இல்லாமல் வெகுமானம் இல்லை என்பதற்கு சாபிளின் வாழ்கை நல்லதொரு எடுத்துக்காட்டு.சிறு வயதிலையே அளவுக்கு மீறிய வலிகள்,தாழ்வு எண்ணங்கள் பின்னாட்களில் அவர்களை மற்றவர் முன்னிலையில் தன்னை முக்கியம் உள்ளவனாக காண்பிக்க முயலும்.இதற்கு ஹிட்லர் மட்டும் அல்ல சாப்ளினும் சிறந்த உதாரணமே.
பசிக்கின்ற குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதற்கு முடியாத அந்த தாய் மேற்கொண்ட தந்திரம் கதை கூறி உறங்கவைப்பது.அந்த தாயின் மனவெழுச்சியில் வந்த கதைகளே பின்னாளில் உலகையே கட்டிப்போட்ட
“The kid”, ”Modern times”, ”City lights”, “circus” போன்ற சாப்ளினின் படங்களின் கரு.


வறுமையும் பசியும் வலி என்றால் தாயின் பிரிவு அதை விட மேலான வலி என்பது அனுபவித்த ஒவ்வொரு ஜீவனுக்கும் தெரியும்.அந்த வேதனையும் சாபிளினுக்கு கிடைத்தது.அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவனது அண்ணன் சிட்னி. சாப்ளின், சிட்னி இருவருக்கும் தாய் ஒன்றே தவிர தந்தையர் வேறானவர்கள்.ஆனாலும் அவன் சாப்ளினுக்கு இறுதி வரை தாயாகவே இருந்தான்.
பிள்ளைகளை பிரிந்த அந்த தாய் பைத்தியமாக மாறியமையும் அந்நியர் போல் தந்தை வீட்டில் நடத்தப்பட்டமையும் சாப்பிளினுக்கு பிறர் வலியை கற்றுக்கொள்வதை இலகு படுத்தியது.
வாழ்க்கைச் சக்கரம் துன்பத்தை மட்டும் கொண்டது அல்லவே.நாடகக் கம்பெனியில் இணைந்து கொண்டபின் அவர் முன்னேற்றத்தை நோக்கி நகரத்தொடங்கினார்(தொழில் ரீதியாக).
வாலிப வயதில் எண்ணங்களின் சுனாமியாக வரும் காதல் அவருக்கு விதிவலக்காக இருக்கவில்லை.அவர் காதல் கொண்டது ஹெட்டி எனும் பாலே நடன தாரகை மீது.ஆனால் அந்த காதல் தோல்வியிலே முடிந்தது.பின்னாளில் சாப்ளின் பலரை மணந்த போதும் யாரும் ஹெட்டியின் வெற்றிடத்தை நிரப்பவில்லை.
இழப்பதற்கு துணிச்சல் உடையவனே பெறுவதற்கு தகுதி உடையவன்.போராட்டம் கண்டு பின்வாங்காமல் முட்டி மோதியவனே வெற்றியாளன்.அத்தகைய வெற்றியாளனே சாப்ளின்.
சாப்ளின் படங்களில் என்னை கவர்ந்த விடயங்கள் பல.அவற்றில் ஒன்று இளைத்தவன் பலவானை புத்தியால் ஜெயிப்பது.இதை அவர் திரையில் காண்பிக்கும் அழகு அபரிதம்.அவரது படங்களில் நகைச்சுவை மாத்திரம் இராது.ஒரு ஆழமான செய்தி மின்னிக்கொண்டே இருக்கும்.அவர் திரையில் எப்படி தனது குள்ள உருவத்தோடு பலவான்களோடு போரிட்டாரோ அதே போன்று நிஜத்திலும் அமெரிக்கா அரசாங்கத்தின் முதலாளித்துவ கருத்தை திரை மூலம் சாடினார்.இதுவே அமெரிக்கா அரசாங்கம் அவரை நாடு கடத்த காரணமாய் இருந்தது.
சாபிளின் வாழ்கையில் விநோதங்களுக்கு பஞ்சமே இருக்கவில்லை.அவரது திருமனவாழ்க்கையை நோக்கினால் 28 வயதில் 16 வயது மில்ரெட் ஹரிஸ் , 34 வயதில் 15 வயது லிட்டா கிரே, 46 வயதில் 16 வயது பவுலட் கொடார்ட் என தொடர் திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றுக்கொண்டார்.கடைசியாக தனது 53 வயதில் திருமணம் செய்த ஊனா என்பவருடனே மரணம் வரை வாழ்ந்தார்.

பின்னாளில் பணம் போதும் போதும் என்றளவு சேர்ந்த போதும் மனதில் ஒரு ஏக்கம் நிரந்தரமாக அவரை பின்தொடந்த போதும் தான் உள்ளத்திற்குள் அழுதுகொண்டே உதட்டால் புன்னகைத்து உலகையே வயிறு குலுங்கவைத்தவர் சாப்ளின்.இந்த சாதனையை அவர் செய்தது தன் உடல் மொழியாலே.
உலகில் அவதரித்த விஞ்ஞானிகளிலே தலை சிறந்தவர் என போற்றப்படும் சார்.ஐன்ஸ்டீனே “என்னைப் போன்ற விஞ்ஞானிகளை விட சாப்ளினே உயந்தவர்” என பகீரங்கமாக பத்திரிகைக்கு பேட்டியளித்தார்.
 சாப்ளின் முதல் முதலாக 1940ல் வெளிவந்த “The great defector “ ல் பேசி நடித்தார்.இப்படத்தின் இறுதிக்காட்சியில் அவர் பேசிய வசனமே ,இது வரை வெளிவந்த திரைப்படங்களில் பேசப்பட்ட வசனங்களில் உயர்வானதாக போற்றப்படுகிறது.
1972 ம் ஆண்டு தன் 82வது வயதில் தள்ளாடி வந்து ஆஸ்கார் விருது (வாழ்நாள் சாதனையாளர்) பெற்ற அந்த சாதனையாளர் 1977ல் ஒரு கிருஸ்துமஸ் தினத்தில் உலக மக்களின் கண்ணீராக பூமியில் கரைந்தார்.

Friday, April 16, 2010

கண்ணால் காண்பதும் பொய்யே....

இங்கே நான் தேர்ந்தெடுத்த இப்படங்கள் கொண்டுள்ள சிறப்பம்சம் என்ன வென்றால் உண்மையில் அவை அசையாதவையாகக் காணப்படுகின்ற போதிலும் அவற்றின் நிறச்சேர்க்கையும் கட்டமைப்பும் அவை அசைவதைப்போன்ற மாயையை எமக்கு ஏற்ப்படுத்துகின்றது.

 








இந்த ஓவியத்தில் ஒன்பது மனிதர்கள் ஒளிந்துள்ளனர். அவர்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்?





Tuesday, April 13, 2010

நான் ரசித்த திரைப்படம்


அங்காடித்தெரு படம் பார்க்கும் வாய்ப்பு எனக்கு நேற்றுத்தான் கிடைத்தது.இப்படத்தை பார்த்தே ஆகவேண்டும் என நான் முனைப்புக் காட்டியதற்கு காரணமே சக பதிவாளர்களின் விமர்சனமே.காலம் தாழ்த்தி நானும் அதற்கு விமர்சனம் எழுத வேண்டுமா ? என் சிந்தித்த எனக்கு என் மனதின் உத்தரவு ஆமா என்று இருத்தது.

என் பார்வையில் ஒரு யதார்த்தமான திரை ஓவியத்திற்கு அறிமுக ஹீரோவே நச்.ஏனெனின் பிரபல ஹீரோ என்றால் அவரின் முன்னைய படங்களின் தாக்கம் இருக்கும்.
Banner: Ayngaran International
Production: Karunakaran, Arun Pandian
Direction: Vasantha Balan
Star-casts: Magesh, Anjali, A. Venkatesh and others
Music: Vijay Anthony and G.V. Prakash
அந்த வகையில் கதாநாயகன் ,கதாநாயகி தெரிவு அருமை. மகேஷ்,அஞ்சலியின் காதல் சிணுங்கலுடன்  ஆரம்பித்த படம் சற்றுமே எதிர்பாராத விபத்தின் மூலம் எம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.அந்தக்காட்சியில் இருந்து அவர்களின் கடந்த காலத்திற்குள் தாவினாலும் முடிவு வலிக்குமே என மனது உணர்த்தி விடுகிறது.


வீட்டுச்சூழ்நிலை காரணமாக சென்னை வரும் அவர்களுக்கு வெளியில் நின்று பார்த்தபோது அந்தக்கடையின் பிரமாண்டம் எப்படி மயக்கியதோ ,உள்ளே சென்றவுடன் அவர்கள் கனவுகள் ஒன்றொன்றாக தகர்க்கிறது.அண்ணாச்சியின் வன்முறை வரம்புமீறல்.ஆனால் அதை மிகைப்படுத்தல் என்று சொல்லமுடியாது.மனித உருவில் பல மிருகங்கள் ஜீவிப்பது நிஜம்.ஒரே வலியை அனுபவிக்கையில் அவர்களுக்குள் ஒரு புரிந்துணர்வு ஏற்படுவது இயல்பே.


அஞ்சலி தனது வலியை நீர் முட்டிய கண்ணோடு மகேஷிடம் சொல்லிக்கொண்டே வாடிக்கையாளரிடம் யதார்த்தமாக பேசுவது அவரின் நடிப்புக்கு ஒரு பளிச்.
 பொதுவாகவே முதல் காதலையே ரோஜாவில் விழுந்த பனித்துளி போல அழகாக பார்த்த எமக்கு இவர்கள் இரண்டாவது காதல் ரோஜா பூச்செண்டு போல மிளிர்வது இயக்குனரின் கைவண்ணமே.
அங்கே வேலை செய்த பெண்ணின் காதல் நிருபணம் கோழைக் காதலர்களுக்கு ஒரு நெற்றியடி.இரத்த பாசத்தை அண்ணா வேலை செய்யும் கடையின் பையின் மீது காட்டும் அத்தங்கையின் காட்சிப்படைப்பு நல்லதொரு குறியீடு.
பாடல்கள் காட்சியோடு ஒன்றிப்போவதால்(வெளிநாட்டு  கலைஞர் ஹீரோ பின்னாடி ஆடவில்லை,சென்னையில் இருந்து திடீர் என பைசா கோபுரத்துக்கு எஸ்கேப் ஆகவில்லை) ரசிக்க வைக்கின்றது.அவள் அப்படியொன்றும்,உன் பெயரைச்சொல்லும் போதே,எங்கே போவேனோ பாடல்கள் மேலடியாய் நெஞ்சுக்குள் ரீங்காரமிடுகின்றன.விஜய் அன்டனி மேலடியிலும் அசதி இருக்கிறார்.வெயிலைப்போலவே ஜி.வி.பிரகாஷு இதிலும் வசந்தபாலனுக்கு தோள் கொடுத்திருக்கிறார்.
மகேஷ் தன் காதலைப் புரியவைக்க நள்ளிரவில் மகளிர் ஹாஸ்டல் சென்று உணர்வாய் பேசுவதும் தமிழ் ஹீரோக்கள் பத்து தடியர்களை ஒரே அடியில் திணறடிப்பதை விட வீரமாய் தெரிகிறது.மகேஷின் நண்பனாய் வரும் பாண்டி கனாக்காலத்தில் இருந்த இருந்த பிரியத்தை மேலும் அதிகப்படுதுகிறார்.
அடியின் வலிக்கோ,சூழ்நிலைக்கோ பயந்துவிடாமல் தன் எண்ண ஓட்டத்தை விளிப்படுத்தும் காட்சியில் மகேஷின் நடிப்பு சூப்பரோ சூப்பர்.நடிப்பு என்று தெரியவேயில்லை.
அத்தனை வலிகளையும் அவர்களோடு சேர்ந்து அனுபவித்த எமக்கு வசந்தபாலன் இறுதியில் தந்த வலி சற்று அதிகமே.ஆனாலும் முடிவு ஏற்புடைய ஒன்றே.
நோயாளிக்கே வைத்தியன் தேவை,வாழ்கையில் சோர்ந்து போய் இருப்பவனுக்கு இப்படம் தன்னம்பிக்கை ஊட்டும் என்பது நிஜம்.
உண்மையிலே இத்திரைக்காவியத்தை வடிவமைத்தமைக்காக வசந்தபாலன் அவர்களை பாராட்டியே தீரவேண்டும்.   



Monday, April 12, 2010

ரெமோ


ஹரி வீட்டுக்குள் நுழைந்த போது அவனது தம்பியும் அம்மாவுமாக எதோ ஒன்றைச் சுற்றிநின்று விநோதமாகப் பார்த்துக்கொண்டுநின்றார்கள்.என்ன வென்று தெரியவில்லை.தம்பியை விலத்திவிட்டுப்பார்த்த ஹரிக்கு அதன் தோற்றம் வெறுப்பையே தூண்டியது.ஹரியின் புருவங்கள் உயர்ந்ததையும் வாயின் நெளிப்பையும் நோக்கிய அவனது தாய் “பாவண்டா ! நடு வீதியில கவனிப்பார் யாரும் இல்லாம நிண்டுச்சாம் எண்டு கோகுல் தாண்ட தூக்கிட்டு வந்தான். பாரேன் அதிர முகத்த எவ்வளவு சாந்தமா இருக்கு என்ன “,எண்டு அம்மா சொல்ல ஹரிக்கு கோவம்தான் வந்திச்சு.

“அய்யோ அம்மா இது சரியான நோஞ்சான் நாய்,அழகு என்ற ஒன்று இதற்கு மருந்துக்கும் இல்ல.இதற்குப்போய் இத்தனை சிபாரிசு பண்றியே என்று வெறுத்திட்டே சொன்னான் ஹரி.
“நீ கூடத்தான் அழகில்லை அதற்காக அம்மா உன்னில அன்பு காட்டலையா?“என்று கேட்டுட்டே அம்மாவிற்கு பின்னாடி ஒளிச்சான் கோகுல்.கொகுலைப் பார்த்து முறைத்த அம்மா “ஹரி இந்த நாயிக்கு வைக்க நல்ல பெயர் ஒண்டு சொல்லண்டா ? என்றார்.வேண்டா வெறுப்புடன் “பராக் ஒபாமா எண்டு வையுங்களேன் என்றான். உடனே கோகுல் நல்ல பெயர் தான் அண்ணா ,ஆனால் வெளி ஆட்கள் கேட்டா சிரிபாங்களே.எண்டாலும் பரவாயில்லை அண்ணா வச்ச பெயர் மாற்ற ஏலாது.hey puppy, here after your name is barack obama என்றான்.ஐயோ நீங்க பெயர் வச்சது போதும்,நானே வைக்கிறேன் எண்டு சொல்லி “ரெமோ “சூப்பரா இருக்குதே என்றார்.
நாய் கருப்பு ஆனா பெயர் வெள்ளையாம்,நான் இதை கூப்பிடையும் மாட்டன்,சோறும் வைக்கவும் மாட்டன்,என்று சொல்லிட்டே ஹரி உள்ள போய்விட்டான்.அம்மா ஹரிக்கு ரெமோவ பிடிக்காத படியா அவன் இதுக்கு அடிப்பானோ தெரியா எண்டு சொன்ன கொகுல்ட் அவன் அப்படியெல்லாம் பண்ண மாட்டன்,போகப்போக அவனுக்கும் பிடிச்சிரும் என்றார் அம்மா.

அன்றையில் இருந்து ரெமோவிற்கு வீட்டில் ராஜ உபசாரம்.காலைலே சீனியற்ற பால்.அதை அம்மாவும் கொகுலும் மாறி மாறி துணி திரித்து பருக்குவார்கள்.அதற்கு பின்னரே ஹரிக்கு காப்பி கிடைக்கும்.மதிய உணவும் முதல் பந்தி ரெமோ தான்.இரவில் ஆறு மணிக்கே இரவுச்சாப்பாடும் வழங்கப்பட்டு விடும்.இதற்காக ஹரி அப்பாவிடம்  தனது அதிருப்தியை வெளியிட ,அப்பா கேட்டார் உனக்கு ஏண்டா அதப்பிடிக்கல்லை?
அது அழகில்லையே,எண்ட நண்பர்கள் எல்லாம் நல்ல சாதி நாய் வழக்கின்றாங்க என்றான்.மனிதனுக்கே சாதி பார்க்கின்றது அசிங்கம் என்று பெரியார் சொல்லிஇருக்கின்றார்.நீ போய் நாயிக்கு பார்கின்றாயே,நாய் வளர்க்கின்ற அழகுக்கு இல்லை,காவலுக்கு புரிஞ்சுதா? என்றார்.ஹோலில் மாட்டி இருந்த பெரியார் படமும் அதை அமோதித்த போல் இருந்தது ஹரிக்கு.

ஒரே துடினமாக காணப்படும் ரெமோ இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் படுத்துக்கொண்டு இருந்தது.அதைப் பிடிக்காவிட்டாலும் அது நோயாளி போல் இருப்பது ஹரிக்கு ஏதோ பண்ணியது.அம்மாவிடம் போய் கேட்டான்.அவரும் வேதனையாக நேற்றில் இருந்து ஒண்டுமே சாப்பிடுது இல்லை என்று வெதனையோடே சொன்னார்.
ரெமோ வீட்டு வாசலில் படுத்திருந்தது.ஹரி ஓடிப்போய் ரெமோவை கிட்ட நின்று நோக்கினான்.அது மிகவும் சொர்வாகப் படுத்திருந்தது.மெதுவாக மூச்சுக்காற்று மட்டும் உள்ளே வெளியே பிரயாணித்துக்கொண்டிருந்தது.முதல் முறையாக ஹரி “ரெமோ என்று கூப்பிட்டான்.ஒரு அசைவும் இல்லை.அப்பொழுது படலையில் கல் விழுந்த சத்தம் கேட்டதுதான் தாமதம் மிகவும் சிரமப்பட்டு எழுந்த ரெமோ மெதுவாக நடந்து படலை வரைச்சென்று நீர் வற்றிய தன் தொண்டையால் இரண்டு தடவை குரைத்தது.பின் மெதுவாக நகர்ந்து வந்து தனது முன்னைய இடத்தில் படலையை நோக்கிய படி படுத்தது.ஹரிக்கு தொண்டை வரை ஏதோ கட்டிக்கொண்டு வந்ததை உணர்ந்தான்.கண்கள் முட்டிக்கொண்டு நின்றன.கை உரோமங்கள் சிலிர்த்து நின்றன.அழகில்லாத நாய் தான்.ஆனால் எத்தனை உண்மையான விசுவாசி.

சித்திரை வருடத்துக்கு என அவனது மாமா முன்கூட்டியே கொடுத்த பணத்தை எடுத்து தனது உள்ளங்கைக்குள் பொத்திய படி நாயை நெஞ்சோடு அனைத்துத்தூக்கியபடி “அம்மா ரெமோவை டாக்டர்கிட்ட காட்டிட்டு வாறன் என்று கத்திக் கொண்டே சிட்டாய்ப்பறந்த மகனை வினோதமாய் பார்த்தாள் அந்த அன்பான அம்மா.

Saturday, April 10, 2010

அன்பின் மாறுபட்ட பரிணாமம்


வேலை விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திருப்பிக்கொண்டு இருந்தேன்,நன்றாக வெளுத்திருந்த வானத்தில் திடீர் என ஓர் மாறுதல்.மின்னல் கீற்றுக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொன்றிமறைந்தன.இடி முழக்கம் வேறு தன் பங்குக்கு பிரமையூட்டியது.

கடை அருகில் ஒதுங்குவமா ? என யோசித்தேன்.ஆனால் IPL மேட்ச் தொடங்க இன்னும் பத்து நிமிடம் தான் இருந்திச்சு.வண்டியின் வேகத்தைச் சற்றுக்  கூடிய போது  வானில் இருந்து வந்த மழைத்துளி என் மூக்கில் பட்டுத்தெறித்தது.மேல இருந்து யாரோ பன்னீர் தெளித்த போன்ற உணர்வு.ஆனால் அடுத்த நொடியே துளிகள் பன்மடங்காக கூடி என்னை முற்றிலும் நனைத்து விட்டது.அந்த வேளை என்னைக்கடந்து சென்ற குளிர் காற்று என்னை சிலிர்க்க வைத்து விட்டுச்சென்றது.
வீட்டை வந்தடையும்  வேளை முழுமையாகவே நனைந்து விட்டேன்.அப்படியே வரவேற்ப்பறைக்குள் பாய்ந்துசென்று “சுருதி..... என்று மனைவியை கூப்பிட்டேன்.எனக்குத் தெரியும் மழையில் நனைந்து விட்டு வந்து வீட்டை ஈரப்படுத்துவிங்க என்று ,அப்படியே நல்ல பிள்ளைபோல வராந்தாவில்நிண்டு தலையை துவட்டுங்கோ எண்டு சொல்லிக்கொண்டே துவாயை என் முதுகில் போட்டு விட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அப்பொழுது இருமிக்கொண்டே எனது சாரனை கொண்டுவந்து எனது கையிலே கொடுத்த அம்மா எனது தலையை துவட்டத் தொடங்கினாள்.மழை தொடங்கவே ,நீ வேலை விட்டு வார நேரம் நனையப்போறியோ என்று கவலையா இருந்திச்சிட்டுடா;ஏன் கொஞ்சம் நிண்டு வந்திருக்கக்கூடாதா?
என்று தன் அன்பைக் கொட்டினாள்.



அந்த நேரம் மனைவி சூடான காபியை கொண்டு வந்து நீட்ட ஏன் அவள் உடனே உள்ளே சென்றாள் என்ற காரணமும் புரிந்தது.அப்பொழுதுதான் மேட்ச் ஞாபகம் வர டிவியை நோக்கி ஓடினேன்.

Friday, April 9, 2010

மனநோயாளி


என் வீடு செல்லும் வழியில் கட்டிடங்கள்,மரங்கள் எப்படி நிலையாக காணப்படுகின்றனவோ அது போன்றே ஒரு மனிதனும். அவ்வீதிக்கு ஓர் அடையாளம்.


வழுக்கை பாதியும் முடி மீதியுமான தலை,சவரம் செய்யப்படாத சீரின்றி வளந்த தாடி மீசை.அதுவே அவனது முகமூடி.கந்தலும் கிளிஞ்சலுமான சாரன் ,பொத்தான்கள் மூடாத அழுக்கேறிய சட்டை.இதுவே அவனது அங்க அடையாளங்கள்.இவை போக அவனது நடையில் ஓர் அபரித வேகம் காணப்படும்.பார்வையும் முடிவில்லாமல் எதையோ தேடிக்கொண்டு இருக்கும்.மூச்சிக்கு ஒரு தடவை எச்சிலை காறி உமிழ்ந்து கொண்டிருப்பான்.அவனை கடந்து செல்கையில் வாந்தியை வரவழைக்கும்  துர்நாற்றம்.இவன்தான் பாபு.
அதிகாலைப்பனியில் ஓர் போர்வை கூட இன்றி தனது சாரத்தினாலே தன்னை மூடிக்கொண்டு தேநீர் கடை வராந்தாவில் அவன் படுத்திருப்பதினைப் பார்த்தால் நமக்கு நெஞ்சு கனக்கும்.கடை திறக்க மட்டுமே அவனுக்கு தூக்கம்.கடை திறக்க டீ மாஸ்டர் பாத்திரத்தை கழுவி அவனிலே வீசி அவனுக்கு திருப்பள்ளியெழுச்சி செய்து விடுவான்.பாபுவும் அந்த கடுப்பை நாள் பூராக கடை வாசலில் உள்ள பூவரசம் மரத்தினிடம் காட்டிக்கொண்டுஇருப்பான்.
கடையில் வேலைகளுகிடையில் அங்கே வேலைசெய்யும் மனவக்கிரகம் பிடித்த ஊழியர்களுக்கு விளையாட்டுப்பொருளும் இந்த பாபுவே.
அவன் புரியாத பாஷா பேசி மிருக ஒலியில் அழுவது அவர்களுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்துவது இறைவனின் படைப்பின் விந்தை.

அவன் தேநீர் கேட்டு சில்லறையுடன் கடைவாசலில் வந்து பிச்சைகேட்கும் போது (பணம் கொடுத்து) கடை உரிமையாளன் அவனை வெளியே போகும் படி அதட்டும் தொனியில் வாசலில் கனவு காணும் நாயே எழுந்து ஓடும்.அத்தனை வன்முறை அத்தொனியில்.வாடிக்கையாளர்கள் குறையும் போது பணம் பெறப்பட்டு தேநீர் விற்கப்படும்,வசைச்சொற்கள் இனாமாக வழங்கப்படும்.

பாடசாலை விட்டுச்செல்லும் சில காடை மாணவர்கள் (மாணவர்கள் என்று சொல்லப்பிடிக்கவில்லை) இரகசிகமாக அவன் மீது கல்லை வீசி அவனை யுத்தத்திற்கு அழைப்பதும்  அவனது பதில் தாக்குதலில் அவ்விடம் களோபறிப்படுவதும் முடிவில் ஒரு பலவான் அவனை அடிப்பதும் வலியின் உச்சம்.
இத்தனைக்கும் சுனாமியின் அகோரத்திற்கு தன் குடும்பத்தை கடலுக்கு தாரை வார்த்துக்கொடுத்தவன் அவன்.அதுவே அவனது மனநோய்க்கான காரணம்.






ஒன்று மட்டும் எனக்கு புரிகின்றது அவன் காறி உமிழ்வது அவனை காயப்படுத்தும் மனிதர்களுக்கு அல்ல.இத்தகைய புத்தியுடைய மனிதனை படைத்த ஒன்றை நோக்கி (கடவுளாகவும் இருக்கலாம்).