Monday, April 26, 2010

புரியாத புதிர்

விடுமுறைக்கு வீடு வந்து விட்டு ஊரைவிட்டுத் திரும்பும் ஹரிக்கு ஒவ்வொரு தடவையும் வீட்டைவிட்டு பிரியும் மணமகள் நிலைதான்.என்னதான் தைரியமாய் இருந்தாலும் அம்மாவிடம் போய் வருகின்றேன் என்று சொல்லி அம்மாவின் முகத்தை பார்த்தால் அனைத்து தைரியமும் அவர் கண்ணில் இருந்து வரும் கண்ணீரில் கரைந்தே விடும்.இது இன்று நேற்று அல்ல,எப்பொழுது முதல் தடவையாய் வீட்டைவிட்டு கல்லூரிக்கு சென்றானோ அன்றைக்கு என்ன நடந்ததோ அதே சம்பவம்தான் ஒவ்வொரு விடுமுறை முடிவின் போதும்.
அம்மா பக்கத்தில் நின்று பிரார்த்தித்து விட்டு உச்சிமொந்தாள்.ஹரிக்கு உள்ளுக்குள் பிரவாகம்,ஆனால் வெளிக்காட்டாமல் “அம்மா,இப்பொழுது தான் வேலையில் சேர்ந்து இருக்கிறன்.இப்பவே அடிக்கடி லீவு எடுத்தா நல்லாவா இருக்கும்.வார மாசம் எப்படியும் வந்திட்டுதான் போவன்.நீ தைரியமா இரும்மா என்று சொல்லி தன் தைரியத்தை அடகு வைத்து விட்டுச் செல்கிறான் புகையிரத நிலையம் நோக்கி.

அன்றைக்கு வண்டிக்குள் பெரிதாக சனம் இல்லை,அதனால் ஹரி ஜன்னல் ஓர இருக்கையை கைப்பற்றிக்கொண்டான்.வழமையாக வரும் நண்பர் பட்டாளம் கல்லூரிப்படிப்போடு பிரிந்துவிட்டனர்.இப்போதெல்லாம் ஹரிக்கு வண்டியில் நண்பர்கள் “ஐப்பொட் + “கற்பனை” +”தூக்கம்.
வண்டியில் ஏறியதில் இருந்து அதே ஒழுங்கில் நண்பர்களுடன் சங்கமிப்பான்.
ஏறியவுடன் பாட்டைக்கேட்கத் தொடங்கியவனுக்கு “அவள் அப்படியொன்றும் அழகில்லை... “பாடல் தனக்கொரு காதலி இல்லையே என பொருமவைத்தது.அடுத்ததாக ஒலித்த “உன் பெயரை சொல்லும்போது...பாடல் ஏக்கத்தை ஏணியில் ஏற்றிக்கொண்டு இருக்கையில் “Excuse me” என்ற ரிங் டோன் கண்ணை திறக்க வைத்தது.எதிரே அழகுப்பதுமையாக ஒரு பெண்.இடம் பிடிபதற்க்காக அவசரப்பட்டு வந்திருக்க வேண்டும்.முகத்தில் வேர்வைத்துளிகள்,சுவாசத்தில் ஒரு வேகம்.அவள் ஏதோ கேட்டது போன்று தோணவே ஹரி காதில் மாட்டி இருந்த ஹெட் செட்டைக் கழற்றாமல் என்ன என்றான்.அவள் ஒரு அழகி மட்டும் அல்ல,புத்திசாலியும் கூட.அவள் காதில் மாட்டி இருந்ததை அகற்றும் படி அழகாகவே பாவனை செய்தாள்.அந்தப் பாவனையே ஹரிக்கு ஸ்ரீதேவியை நினைவூட்டியது.பொதுஇடங்களில் பேசும் போது கூட ஸ்பீக்கரை காதில் மாட்டிக்கொண்டோ அல்லது ஒன்றை மட்டும் கழற்றிப் பேசி பலரின்(நடத்துனர் பலர் அடக்கம்) கடுப்பைக்கிளறிய அவன் அவள் அழகி என்ற ஒரே காரணத்திற்க்காக உடனே கீழ்ப்படிந்தான்.அவள் மெதுவாக “உங்களுக்கு முன் சீட்ல யாரும் இருக்கின்றான்களா? என்றாள்.(இருந்தாலும் இல்லையே என்றுதான் சொல்லி இருப்பான்.)யாரும் இல்லை உட்காருங்க என்றான்தன் சொந்த ஆசன உருமையில்.

பரஸ்பரம் புன்னகைகள் பரிமாறின.அவனது கேள்விகளுக்கு அவளும் புன்னகையுடன் பதில்களை சொல்லி அவனது எண்ண ஓட்டத்தை வேகப்படுத்தினாள்.அவளது பதில்களை கவிதைகளை கேட்பதைப் போன்று கேட்டுக்கொண்டு இருந்தவன் திடீர் என ஒரு கேள்வியை கேட்க முனைகையில் அவனது பாக்கட் அதிர்ந்தது,செல்போனில் அவனது வீட்டு இலக்கம் விழுந்தது.கட் பண்ணி பாக்கட்டுக்குள் திணித்தான்.அடுத்த கேள்வியை அவன் தயார் செய்கையில் மீண்டும் அழைப்பு.மற்றப்பக்கம் திரும்பி செல்போனை ஆப் செய்தான்.மீண்டும் அதே கேள்வியை அவளிடம் அவன் கேட்க நினைக்க “ஹே சுஜா ,சீட் பிடிச்சிட்டீயா?நான் ஒவ்வொரு பெட்டியா தேடிட்டு வாறன் என்றான் ஹரியின் வயதொத்த வாலிபன்.கையில் இருந்த அப்பத்தை காகம் பறிச்சது போல இருந்தது ஹரிக்கு.வந்தவனுக்கு அவள் ஹரியை அறிமுகம் செய்து வைத்தாள்.அவன் அதை பெரிதாய் கண்டு கொள்ளாமல் அவளுடன் பேச்சைத்தொடந்தான்.
ஹரிக்கு அவர்களது பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பை ஏற்றிக்கொண்டு இருந்தது.பின்பு தன்னைத்தானே சமாதானப்படுத்தி சகஜ நிலைக்கு வந்து விட்டான்.அந்த நிலையில் தான் தான் ஆப் செய்த போன் ஞாபகம் வந்தது.போனை ஒன் செய்தவன் வந்த மிஸ் கால் அலட்டைப் பார்த்து மிரண்டே விட்டான்.உடனே வீட்டுக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.அழுது கொண்டே அம்மா அழைப்பை பெற்றுக்கொண்டாள்.அம்மா பேசத்தொடங்க அவனை மீறி கண்ணீர் தரை தொட்டது.நீண்ட போராட்டத்தின் பின் பொய் வாதங்களை முன் வைத்து அம்மாவை சமாதானப்படுத்தினான்.என்றாலும் அவனது குற்ற உணர்வு அவ்வளவு சீக்கிரம் அவனை மன்னிக்கவில்லை.
அவனுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த அவர்கள் தங்கள் தரிப்பிடத்தில் எழுந்தார்கள்.அவள் அவன் முன்னால் இருந்ததற்கு தடயமாக ஹரியை நோக்கி ஒரு புன்னகையை விட்டுச்சென்றாள்.ஆனால் அவன் அவளிடம் கேட்க நினைத்த கேள்விக்கான விடை அவனுக்கு இன்னமும் கிடைக்கவில்லை.
இதாங்க அவன் கேட்க நினைத்த கேள்வி,நீங்க யாரையாச்சும் காதலிக்கின்றீன்களா?.
ஏனென்றால் அவன் பார்வையில் அவர்கள் காதலர்கள்,ஆனால் அவர்கள் பேச்சில் அவர்கள் நண்பர்கள்.

4 comments:

Chitra said...

உணர்வுகளே கதையின் கருவாக அமைந்த கதை. நல்லா இருக்குங்க. பாராட்டுக்கள்!

malgudi said...

கருத்திற்கு நன்றி சித்ரா.

Tamilselvan said...

nice

malgudi said...

@Tamilselvan
இந்தக்கதைக்கு மிகநீண்டநாட்களின் பின் ஒரு பின்னூட்டம்.
நன்றிங்க.

Post a Comment