Friday, December 5, 2014

வடுக்கள் யாவும் மறைவதில்லை.(சிறுகதை)

தாமதமாக ஆபீஸில் இருந்து வெளியே வந்த கணேஷிற்கு, வீடு செல்ல வேண்டிய அவசரமும்;தொடர்ந்து கணணி முன்னாடி உட்கார்ந்து கொண்டிருந்ததால் வந்த உடல் சோர்வும் சேர்ந்து சலிப்பையே உண்டுபண்ணியிருந்தது.நல்லவேளை பஸ்சும் தன்பங்கிற்கு அவனைச் சோதனை பண்ணாமல்,காத்திருக்க வைக்காமல் வந்துவிட்டது.

ஏழு மணிக்கு கல்முனை மட்டக்களப்பு பஸ் இரண்டு பேர் உட்காருவதற்கான இருக்கையோடு வந்தது கணேஷிற்கு பிரமிப்பாய் இருந்தது,ஏனென்றால் வழமையாக தீப்பெட்டிக்குள் குச்சிகளை அடுக்கியது போல பயணிகளை ஏற்றிக்கொண்டு; நிம்மதியாக சுவாசிக்கக் கூட வழியில்லாமல்,கம்பியிலே தொங்கி வேர்வையிலே நனைந்தே வீடுவந்து சேர்வான்.

தாவி ஏறியவன்,ஒரு நடுத்தரப் பெண்மணிக்கு அருகில் இருந்த ஜன்னலோர இருக்கையில் தொம் என்று அமர்ந்துகொண்டான்.பஸ்சும் செற்றே வேகம் பிடிக்க,முகத்தில் மோதிய கூதல்க் காற்று அவனது களைப்பைப் போக்க,மனதின் இறுக்கம் குறைவதை உணரத்தொடங்கினான்.