Thursday, September 15, 2011

காலனாய் வந்த காமம்


விடலைப்பருவத்தில் விடைதேடிய உணர்ச்சிகளுக்கு
விடையானாள்,வினையானால் –பலநாள் செவியேறிய விலைமாது
விதியெனும் பாம்பு தீண்டியே விட்டது
விரல்களின் கோலத்தில் வரும் வீம்பை

அந்த நாள் சுவர்க்கமென திளைத்திருக்க
உச்சிப்பொறியில் உள்ளுணர்வு அலறியது
வீடு திரும்பியவனை மொத்தமாய் விழுங்கியது-குற்ற உணர்ச்சி
கண் நோக்கும் பார்வை காலிலே குத்தி நின்றது

பெற்ற தாய் முன்னே பேச நா நாணி நிக்க
பிசைந்த சோறு பீங்கானை கட்டி நின்றது
கையேந்திய தண்ணீர்க் கிண்ணம்
தரைக்கே சமர்ப்பணமானது

கொஞ்ச நேரம் சிற்றின்பம் பெரிதென மயங்கி
கொஞ்ச இருந்த மனையாள் உறவை மறந்து
தூரமாய் விலக நினைக்கும் துயர இடம் நாடி
தூண்டில் மீனாய்த் துடித்துக்கொண்டிருந்தான்

இரவிலே தூக்கம் தூரமாய் ஓட
பகலிலே ஏக்கம் – அதற்க்குத் தூது செல்ல
பல நாள்ப் பொழுதுகள்
பதறியே ஓய்ந்தன

இறுதியில் நடந்தான்-நோய் தீர்க்கும் இடம் நோக்கி
அந்த இடம் செல்ல –ஆரத்தழுவியவள் அங்கு நிக்க
அஞ்சியே ஒதுங்கியவனை-அதட்டினான் சிற்றூளியன்
வைத்தியன் முன்னே –வார்த்தைகளைப் பொறுக்கி
வசனமாய்க் கோர்த்துக் குழைந்து நிற்க
காலை நக்கும் நாயைக் கொடூரமாய்ப் பார்ப்பதாய் இருந்தது
அவன் பார்வை

கை படாமல் கால் படாமல்
மூச்சிக் காற்றுக்கு விலகி நின்ற தாதி
உறிஞ்சிச் சென்றாள் இரத்தத்தை
கசக்கிய காகிதமாய் –கலங்கிய இதயத்துடன்
தேவாலய வாயிலில் குப்பையாய் வந்து நின்றான்
ஓயாமல் வாய் செபிக்க
ஓராயிரம் நாளாய்க் கடந்தான்-அந்த நாளை

காலைக்காய் காத்து இருந்தவனாய்
கடுகதியாய்க் கடந்து சென்றான்-வைத்தியசாலையை
கழுத்திலே தொங்கிய குருஸ் பார்த்து பலர் சீண்ட
அழுதுகொண்டே கழட்டினான் தன் அடையாளத்தை
தொங்கிய பதாதைகள் –காலம் கடந்து
கண்ணில் பட்டு புத்தியை செருப்பால் அடித்தது
கால் கடுக்க நின்றவனைக் கடந்து சென்ற வைத்தியன்
சாதாரணாமாய்ச் சொன்னான் –போசிடிவ் என்று

கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தன
கனவாய்க் கண்ட வாழ்க்கையெல்லாம்
தீர்க்கமாய்ப் புறப்பட்டான்-வாழ்வின் முடிவை நோக்கி

0 comments:

Post a Comment