Sunday, October 21, 2012

வயல்ப் பயணம்.....1




அது என்ன காரணமோ தெரியவில்லை,முன்னாடி போல் எழுதுவதற்கு பெரிதாக இஷ்டம் இல்லை.அப்படி எழுத உட்கார்ந்தாலும் முகப்புப்புத்தகத்தை பத்து நிமிடம் பார்த்து விட்டு எழுதுவோம்,என்று அதைத்திறந்தால் எழுதுவதற்கு ஒதுக்கிய நேரத்துக்கும் மிச்சமாக புடுங்கிவிட்டு எழும்புவதான் கதை.(டைப் பண்ண ஆரம்பிச்சிட்டல்ல, மேட்டர்க்குத் தாவிர்ரா கைப்புள்ள)





கூடப்படித்த நண்பர்கள் வெளிநாடுகளில் இருந்து பளிங்குக்கட்டடங்களுக்கு முன்னாடியும்,பன்னிக்கூட்டத்தொடும் (சாரி,பனிக்கூட்டத்தில்) நின்ற போட்டோக்களை முகப்புப்புத்தகத்தில் பார்க்கும் போது,எதோ ஒரு ஏக்கம் மனசுக்குள்ள முட்டிக்கும்.அது என்ன கருமமோ தெரியல்ல,அந்தத் தேசிய கடமை காலம் தள்ளிட்டே இருக்கு.....
வேலைக்கு ட்ரை பண்றன் என்று லேப்டாப் முன்னாடி நோண்டிட்டு இருந்த நம்மள,”சும்மா வெட்டியாத்தானே இருக்க,என்னோட வயலுக்கு வாவன்?” என்று அப்பா கூப்பிட,”என்ன என்ஜினியர் முடிச்ச பிள்ளைய (பப்ப்ளிக் ...பப்ளிக்,பெருமை பேசுறது உனக்குப் பிடிக்காதில்லை)அந்தக் வயல்க்காட்டில கொண்டுபோய் கஷ்டப்படுதப்போறீங்களா?”என்று எனக்காக வக்கீலாக ஆஜராகியும் அப்பாவின் வாதமே வென்று வயலுக்குப்புறப்பட்டன்.

பதினைந்து வருட இடைவெளியின் பின் மீண்டும் செல்வதனால்,கால மாற்றம் எமது வயல்சூழ்நிலையை எவ்வாறெல்லாம் மாற்றி இருக்கும் என்று கற்பனையைத் தொடங்கியவாறு மோட்டார் பைக்கைக் கிக் செய்தேன்.

ஏன் இந்தப் பதினைந்து வருட இடைவெளி????
புத்தி பிடிபட்ட காலம் தொடங்கி அன்றாட வாழ்வில் ஷெல் ,குண்டுவெடிப்பு,கைது என்பன சகஜமான ஒன்றே.ஆனாலும் யுத்தம் தனது அகோர முகத்தை வேறு வேறு பார்வைகள் ஊடேயே கிராமங்களையும் நகரங்களையும் அணுகியது.எமது வயல்ப் பகுதிகளைப் பொறுத்த வரை வீட்டுக்கொரு மாவீரர் என்பது அவர்கள் விரும்பியோ வெறுத்தோ,அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று.பாடசாலைக் கல்வியை பாதியில் இடைநிறுத்தி விட்டு யுத்த நீரோட்டத்தில் இணைவது அவர்களது சூழ்நிலை.(ஏன் சூழ்ச்சி,என்று கூட வைத்துக்கொள்ளலாம்)ஆனால் நகர்ப்புறங்களில் பாடசாலைக் கல்வியை முடித்து விட்ட நடுத்தர மற்றும் செல்வந்த வீட்டுப் பிள்ளைகளுக்கு வெளிநாடு செல்வதற்கு இதே யுத்தமே இலகுவான வழியைக்காட்டியது என்பது நிஜமே.

நானும் ஒரு நகர்ப்புறத்தில் வாழ்ந்த ஒரு நடுத்தர மட்டதைச் சேர்ந்தவன் என்ற போதிலும்,எம்மோடு ஒப்பிடுகையில் கிராமப் புறத்தைச்சேர்ந்தவர்கள் அனுபவித்த யுத்த வலிகள் மிகவும் கொடியவைகளே என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.(காலம் அமைகையில்,நான் கடந்து வந்த யுத்த காலத்தைப் பதிவிடுதலில்.மிகுந்த ஆர்வமாய் உள்ளேன்).
  

பதினைந்து வருட இடைவெளிக்கு இதுவே காரணம்.
மட்டக்களப்பு நகரில் இருந்து புறப்பட்ட பைக் கிரானைக் கடந்து ஒடுக்கமான பாதைக்குள் நுழைய தலைக் கவசம் அணிந்து கடினப் பந்துக் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள்,என் மனதுக்கு மிகுந்த சந்தோசத்தை ஏற்ப்படுத்தினார்கள்.

பதிவை நீட்டி வாசிப்பவர்களின் பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை....
என் வயல்ப்பயணம் தொடரும்.......             




2 comments:

KIRAMAM said...

Thodarsiyaaka eluthunkal brother.

Unknown said...

@MARIMUTHTHAN
வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி.

Post a Comment