Sunday, June 2, 2013

நானும் இசைஞானி இளையராஜாவின் இசையும்...பாகம் 1


இளையராஜா அவர்களின் எழுவதாவது பிறந்த நாளுக்கு என் வாழ்த்துக்கள்.அவரது இசை என்னை கரம் பிடித்து அழைத்துச் செல்வதாய் ஒரு உணர்வு எனக்கு எப்போதும் உண்டு.நான் கடந்து வந்த அவரின் இசையை தொடர்ந்து எழுத இருக்கின்றேன்.

நான் எப்பொழுது முதலில் சினிமாப்பாடல்களைக் கேட்க்கத்தொடங்கினேன் என்று மிகவும் சரியாக ஞாபகம் இல்லை.ஆனால் நான் முதலில் ரசித்த பாடல் கண்டிப்பாக இளையராஜா பாடலாகத்தான் இருக்கும் என்று சர்வ நிச்சயமாக நம்புகின்றேன்.காரணம்  80 களின் இறுதியில் இளையராஜா பாடல் இல்லாமல் ஒரு தமிழ் வீட்டிலும் பொழுதுபுலரையும் மாட்டாது,அந்தி சாயையும் மாட்டாது.அந்தளவுக்கு தமிழனின் ஒவ்வொரு அசைவிலும் இளையராஜாவின் இசை இருந்தகாலகட்டம் அது.


என் நினைவை என் வாழ்வின் ஆரம்ப காலத்தில் நான் ரசித்த பாடல்களை நோக்கிக்கொண்டுசென்ற போது எனக்குத் தெளிவாக ஞாபகத்தில் வந்தவை  சின்னத்தம்பி,கேளடி கண்மணி,வைகாசி பிறந்தாசி  பாடல்களே. அதிலும் சின்னத்தம்பி படத்தில் வரும் போவோமா ஊர்கோலம்  பாடல் மனதுக்கு மிகவும் நெருக்கம்.காரணம் அப்போது எனக்கு வயசு 4 இருக்கும். என் அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது,அதோடு ஒரு தம்பி கைக்குழந்தை,மற்றத்தம்பிக்கு ஒரு வயது.நான் வேற செமையா துடுக்குத்தனம் பண்ணகாரணத்தால் என்னை என் பெரியமாமா வீட்டில் இருந்து படிக்கவைத்தார்கள்.

அவர்கள் என்னை மிகவும் நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள்.ஆனால் நான் படம் பார்த்துக்கெட்டுப்போவேன் என்று சொல்லி எனக்குப் படம் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள்.அவர்கள் சாதாரணாமாய் அனுமதித்தால் கூட அப்படி ஒரு வெறித்தனமான ஆசை வந்திருக்காது.ஆனால் அவர்கள் என்னை அறையில் இருந்து படிக்கச்சொல்லி கதவைச் சாத்தி விட்டு வரவேற்ப்பறையில் இருந்த படம் பார்ப்பார்கள்.அப்பொழுது சாத்தப்பட்ட கதவின் நீக்கலுக்கால் கேட்றினூடேதெரியும் மங்கலான காட்சியும்,கேட்கும் ஒலியையும் வைத்தே படத்தை நான் விளங்கிக்கொள்ள வேண்டும்.
அதிலும் பெரியம்மா ஒரு படி மேலே போய் திடீர் என வந்த என்னை செக் பண்ணுவார்.நான் படத்தைப் பார்க்க முயற்சிக்கின்றேன் என்று கண்டால்,கதிரையை திருப்பி உட்கார வைத்து விடுவார்.

அப்படிதான் அன்று அவர்கள் சின்னதம்பி படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அப்போ பார்த்து
"குயிலைப் பிடிச்சி கூண்டிலடைச்சு கூவச்சொல்லுகின்ற உலகம் 
மயிலப்பிடிச்சு காலை ஒடைச்சி ஆடச்சொல்லுகின்ற  உலகம்" 


பாட்டு போயிட்டு இருந்திச்சு.அந்தப் பாட்டும் என் சூழ்நிலையும் ஒன்றாகத் தாக்க நான் தேம்பித்தேம்பி அழ ஆரம்பிச்சிட்டேன்.நான் குஷ்புவ ஓவர் டேக் பண்ண எல்லோரும் படத்தை நிப்பாட்டிட்டு என்னைத் தேற்ற வந்துவிட்டார்கள்.விசும்பி விசும்பி அழுத என்னைத் தேற்ற வழி இல்லாமல் பெரியமாமா தன் மடியில் என்னை உட்க்கார வைத்துப்படம் பார்த்தார்.    
அதுதான் நான் பார்த்த முதல்ப் படம்.:-)படம் எனக்காக முதலில் இருந்து போடப்பட்டது.அப்பொழுது நான்

போவோமா ஊர்கோலம் ....
           
பூலோகம் எங்கெங்கும்...
           
ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்
           
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்
           
போவோமா ஊர்கோலம் ....
           
பூலோகம் எங்கெங்கும்...


பாட்டின் போதே சிரித்து இயல்பு நிலைக்குத் திரும்பினேனாம் என்று மச்சாள் பின்னாடி சொன்னார். சின்னத்தம்பி படத்தில் வரும் அத்தனை பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்தவை.இத்தனைக்கும் எனக்கு குஷ்புவை அறவே பிடிக்காது.:-)


அன்று காதலிக்கத் தொடங்கிய இளையராஜாவின் இசையை இன்றும் உயிருக்கு மேலாய்க் காதலித்துக்கொண்டிருக்கின்றேன். ஒருவரை எனக்குப் பிடிக்க "இளையராஜா இசை எனக்குப் பிடிக்கும்" என்ற வசனம் போதுமானது. தொடரும்....

6 comments:

சேக்காளி said...

அட நம்மாளு

somasundaram movithan said...

@சேக்காளி
வாங்க பங்காளி:-)

குதூகலக்குருவி said...

உங்களின் கதை ரசிக்கும் படி இருந்தது. நன்று நண்பரே ..

somasundaram movithan said...

@குதூகலக்குருவி
நன்றி.தொடர்ந்து எழுத முயற்சிக்கின்றேன்.

Sunil said...

Boss, Vaigasi poranthaachu music Deva

somasundaram movithan said...

@Sunil
தவறைச் திருத்துகின்றேன்...
நன்றி.

Post a Comment