கிழக்கு வானம் இன்னமும் இருள்
அப்பிக்கொண்டிருக்க, தொடர்ந்து இரண்டாம் நாள் கடந்தும் கொட்டிக் கொண்ருந்தது
மழை.முற்றத்தில் இருந்த மாமரம் மழையில்
நன்றாக முழுகி ; துவாரங்கள் விழுந்த குடையாய், மழைத்துளிகளை நிலத்தில் வீழ்த்திக் கொண்டிருந்தது.
மாமரம் நின்ற மேட்டைத் தவிர்த்து முழு
வளவும்,கணுக்கால் அளவுக்கு வெள்ளநீரில் நிறைந்திருந்தது.தகரக் கடப்பைக்
கட்டியிருந்த தும்புக்கயிறு காற்றின் தள்ளுகைக்கு ஈடுகொடுக்க முடியாமல்
அறுந்து..வாசல் ஆ என்று திறந்திருந்தது.
“சோ ..... என்று கொட்டிய மழை கூரைத்தகரத்தில்
மீது விழுந்து பெரும் சலசலப்பை எழுப்ப, போதாக்குறைக்கு ஜன்னல் சீலையை விலத்திக்
கொண்டு வந்த கூதல் காற்றும் சேர்ந்து; கையை மடக்கித் தலைமாட்டுக்கு வச்சிட்டு,பழஞ்சாரனால்
போர்த்திட்டுப் பீத்தல் பாயில் படுத்திருந்த தெய்வானை ஆச்சியை எழுப்பியது.
முன்னாடி போல ஆச்சிக்கு உடம்பில
தெம்பில்ல,அது போக யாருக்காக வாழுறம் என்ற சலிப்பும் அவளது தேவைகளை
குறுக்கியிருந்தன. உடம்புக்கு முடியாமல் இருந்தும், தொடர்ந்து
படுத்திருக்கப்பிடிக்காமல் எழுந்தவள் ...வாசல் கதவைத் திறந்து விக்கிப் போய்
நின்றாள்.என்றாலும் முட்டிட்டு நின்ற சிறுநீரை அடக்கமுடியாமல் சேலையை முழங்கால்
மட்டும் தூக்கிட்டு பின் வேலியோரத்தில் பூவரசம் மரத்தடிக்கு அண்மையில் இருந்த
மலசலகூடத்தை நோக்கி நடந்தாள்.
முகமும் அலம்பிக் கொண்டு குசினிக்குள்
நுழைந்தவள்,தகரத்தால் மூடியிருந்த குச்சிகளில், தூவானதிற்குத் தப்பியவைகளைப்
பொறுக்கி தேத்தண்ணி வைக்க ஆயத்தமானாள். இளகியிருந்த குச்சிகள் பத்துவதற்க்கு
அடம்பிடிக்க ,தன் வாழ்க்கைப் போராட்டம் புகையில் வடிந்த கண்ணீர் ஊடே விம்பமாகியது
அவளுக்கு.
வவுணதீவு,கரவெட்டியில் கடின உழைப்புக்குப்
பெயர்போன சுந்தரம் வட்டவிதானையின் மனைவிதான் இன்று தகரக் கொட்டிலில் தனிமையில்
வதங்கும் 75 வயது தெய்வானையம்மா. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி
மட்டும்,சுந்தரத்தார் உசிரோட இருக்கும் மட்டும் தனிமை எனும் கொடும் வியாதி அவளைத்
தாக்கவில்லை. ஆயினும் இரண்டு ஜீவன்களுக்கு
உயிர் கொடுத்தவள் அவள். மூத்தவள் மூக்கும் முழியுமான சுந்தரி. இப்போது புருஷன்,பிள்ளைகள்
கூட ஓரளவுக்கு வசதியாகவே மட்டக்களப்பில் இருக்கிறாள்.வாரக் கடைசியில் தவறாமல்
பார்த்திட்டு,தேவையானதை வாங்கிக் கொடுத்திட்டுப் போவாள். அவள் எவ்வளவு
தெண்டிச்சுக் கூப்பிட்டும்,இந்தக் காணியை விட்டுப் போக ஆச்சிக்கு துளியும் இஷ்டம்
இல்லை.
காரணம்......தெய்வானைக்கு பிந்திப் பிறந்த
மகன் கணேசன்.இப்போ உசிரோட இருந்தால் போன
புரட்டாதி 25ம் திகதியோட 35 வயசு முடிஞ்சிருக்கும்.
2004 வைகாசி
கருணாவின் பிரிவைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சில ஆண்டுகளாகப்
பணியாற்றிய கணேசன், அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வீடு வந்து ஐந்து மாசமும்
கடந்திருக்காது.திரும்பி வந்த தன் பிள்ளையைக் கடப்புத் தாண்டிக் கூடப் போக விடாமல்
பொத்திப் பொத்தி வைத்திருந்தாள் தெய்வானை.
அன்று சுந்தரதாருக்கு உடம்புக்கு முடியல்ல
என்று வயலுக்குப் போயிட்டு வந்த கணேசன்,கிணற்றடியில் குளிப்பதற்கு “ சவர்க்காரத்தை
எடுதுவாம்மா....” என்றிட்டு வாளியைக் கிணற்றுக்குள் போட்ட சத்தம்
கேட்டிச்சு.சவர்காரத்தோட வந்த தெய்வானை...படலை ஓங்கி அடிச்சுச் சத்தம் கேட்கத்
திரும்பிப் பார்க்க தன் பிள்ளையை நாலஞ்சு பேர் மடக்கி ....ஒரு வெள்ளை வானுக்குள்
தள்ளுவது தெரிந்தது.
நெஞ்சில் அடித்துக் கொண்டு படலையை
நெருங்கும் முன் வான் வீதியைக் கடந்து விட்டது.
அன்று மனசால் செத்த தெய்வானை இன்று வாழ்வது
....அன்று ஓங்கி அடித்துக் கொண்டு சென்ற தன் பிள்ளை அதே படலையைத் திறந்து மீண்டும்
வருவான் என்ற நப்பாசைக்காக மட்டுமே.
கையில் நெருப்புச்
சுட...சுய நினைவுக்கு வந்தாள் அந்தத்தாய் .
-----அரசியல் கைதிகள் விடயத்தில் இனியாவது ஒரு நல்ல மாற்றம் நிகழ்ந்து, அவர்கள் விடுவிக்கப்பட இறைவனை வேண்டுகின்றேன்.---
0 comments:
Post a Comment