Thursday, August 19, 2010

தேடிப்பெறுதல் ………………..(சிறுகதை)

மாலை மயங்கும் நேரம் வீட்டில் இருந்து வீதியை நோக்கி வந்துகொண்டிருந்த சுஜீவனுக்கு பஸ் தரிப்பிடத்தில் பஸ் தரித்துநின்றது நிம்மதிப்பெருமூச்சை வரவைத்தது.சுஜீவனும் பஸ்ஸை நோக்கி நடக்க பஸ்சும் புறப்பட ஆரம்பித்தது.ஓடிச்சென்றவன் தாவி பஸ்ஸில் ஏறிக்கொண்டான்.பஸ்ஸுக்குள் ஏறியவனை வயதான நடத்துனர் கேவலமாகப் பார்த்தார்,ஆனால் அவமானப்படுமாறு எதுவும் சொல்லாதது அவனது கௌரவத்தைக் காப்பாற்றியது.
உட்காருவதற்கு இடம் ஏதும் இருக்கின்றதா? என்று நோட்டமிட்டான், அனைத்து ஆசனங்களும் நிரப்பி இருந்தது.ஆனாலும் அவனுக்கு மின்மினிப்பூச்சியாய் சந்தோசம் சிறகடிக்கத் தொடங்கியது.காரணம் அவனருகே ஒரு அழகிய பெண்.தலையைத் திருப்பாமல் கடைக்கண்ணால் அவளைப் பார்த்தான்.அவள் கண்களே கவிதை பேசின.சோர்த்து இருந்த அவனது மூளை ஆயிரம் கணக்குப்போட ஆரம்பித்தது.
அப்படியே பார்வையை இறக்கியவனுக்கு பகீர் எண்டு இருந்தது,அவளது ஆடை அலங்காரம்.ஏதோ பத்து வயதுச் சிறுமிக்குரிய ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது போலிருந்தது.ஆனாலும் அவளது மோனாலிசா கண்களும்,காற்றைக் கிழிக்கும் மூக்கும்,ஸ்டோபேறிப் பழமோ என்று சந்தேகத்தைத் தூண்டும் உதடும் கொண்ட அவளது அழகிய முகத்தைப் பார்த்து மயங்கியவனால் உடனடியாக அவளை வெறுக்க முடியவில்லை.


தோல் வேறு தமனா கலரில் இருக்கின்றது,நம்ம ஊரில பிறந்தாலும் ஏதோ வெளிநாட்டில இருந்துதான் வந்திருக்க வேண்டும்,என்னதான் வெளிநாட்டில படிச்சாலும் தாய்,தந்தை இங்க தானே பிறந்து வளந்திருப்பாங்க;அவங்களுக்கு பிள்ளை இப்படி ஆடை அணிவது தப்பாத்தெரியவில்லையா?,இந்த நாய் துரத்துகின்ற ஆடையைப் போட்டுக்கிட்டு தனியா வேற வந்திருக்கிறாளே காட்டுச்சிறுக்கி,என்றெல்லாம் தனக்குள்ளே எடுகொளையும் எடுத்து முடிவும் எடுத்துக்கொண்டு இருந்தான் சுஜீவன்.
அப்பொழுது சுஜீவனுக்கு அருகில் அமர்த்திருந்தவர் தனது தரிப்பிடத்தில் இறங்குவதற்காக எழுந்தார்.ஆசனத்தைக் கொடுத்து ஆட்டையைப் போடலாம் என்ற நினைப்பில் விலகி அவள் உட்காருவதற்கு இடம் விட்டான் சுஜீவன்.ஆனால் அவள் அவனைக் கண்டுக்கவே இல்லை.யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மெதுவாக அமர்ந்துகொண்டான்.இப்பொழுது அவனுக்கு அவள் அழகில் எரிச்சலே வந்தது.
அப்பொழுது அவளுக்கு ஒரு அழைப்பு வந்திருக்க வேண்டும்,தன்னுடைய ப்ளக் பெர்ரி போனை காதில் வைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் மெதுவாகப் பேசினாள்.காதைத் தீட்டிக்கொண்டு கேட்ட சுஜீவனுக்கு அதன் சாராம்சம் புரிந்தது.அவள் ஒரு டான்ஸ் கிளப்பிற்கு போகிறாள்,அவளுக்காக ஒரு ஆடவன் அங்கே காத்திருக்கிறான்.என்ன கொடுமை சரவணன் ! என்று தலையில் அடித்துக்கொண்டு ஜன்னல் பக்கம் திரும்பினான்.
அப்பொழுது பெக்கம் ஸ்டைலில் தலை வாரிக்கொண்டு ,காதிலே ஹெட்செட் மாட்டிக்கொண்டு அரைக்கை பனியனோடு வாட்ட சாட்டமான இளைஜன் ஒருத்தன் வண்டிக்குள் ஏறினான்.ஷகி போல தோளை ஆடிக்கொண்டு பஸ்ஸை நோட்டமிட்டவன் அரைகுறை ஆடைச்சுந்தரியை நோக்கி நகர்ந்தான்.மான் வேட்டைக்கு புலி வருவது போலிருந்தது சுஜீவனுக்கு.ஆனாலும் இந்த மானும் லொள்ளுப் பிடிச்சதாயிட்டே,என்று தன்னைத்தானே சமாதானப்படுதிக்கொண்டான்.
அவன் நினைத்ததே நடந்தது,வந்த ஆசாமி அவளைச் சீண்ட ஆரம்பித்தான்.நடிகர் விஜய் போல இருந்தாலாவது அவனை நாலுமாசம் தூங்காத அளவிற்று அடித்து நொறுக்கி விட்டு ,வம்பை விலைக்கு வாங்கியவளுக்கு பஸ்ஸில் இருந்த அனைவருமே விசில் அடிக்கிற அளவிற்க்கு பஞ்ச் டயலாக் விட்டிருப்பான் சுஜீவன்.ஆனா இது ரீல் இல்ல ரியல் ஆச்சே.கம் என்று பொத்திக்கொண்டு இருந்தான் சுஜீவன்.ஆனாலும் அந்தப் பெண்ணைப் பார்க்க ஒரே பரிதாபமாக இருந்தது.
உடனே தன் இருக்கையை விட்டு எழுந்து சுவேதா நான் இறங்கப்போகிறேன்,நீ உட்காரு எண்டான் சுஜீவன்.உண்மையான சுவேதா கூட அந்த அளவு வேகமாக வந்து உட்காந்திருக்க மாட்டாள்.வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டே பெக்கம் ஆசாமியைப் பார்த்தான்.அவன் பார்வையில கொலைவெறி தெரிஞ்சது.சுஜீவன் இறங்குவதற்கு இன்னம் இரண்டு தரிப்பிடம் இருந்தாலும் அவனது உடல்கட்டைப் பார்த்த போது நடப்பதுதான் பாதுகாப்பாய் தோன்றியது.மணியை அடித்துக்கொண்டே தாவி இறங்கிய சுஜீவன் அவளைப் பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிய நினைப்பில் நடக்கும் போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது அவள் போக்கும் இடம் டான்ஸ் கிளப் என்று.

2 comments:

Chitra said...

இந்த கதை எந்த ஊரில்/நாட்டில் நடக்குதுங்க? :-)

malgudi said...

@Chitra
ஈழத்தில்.
யுத்தத்தின் கோரப்பிடிக்குத்தப்பி நாட்டைவிட்டுச் சென்றவர்கள் ,இப்பவந்து பண்ணும் ரவுசு தாங்கலடா சாமி.
//போகிற போக்கில் மியாமி போலாகிவிடும் நம்ம கடல்கரைகள்.//

Post a Comment