Tuesday, January 4, 2011

தைபிறந்தால் வழி பிறக்கும் .(சிறுகதை)

தை பிறந்தாலும் மாரி மழை ஓய்ந்த பாடில்லை.வாசல் வழியே ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் ஓடம் விட்டு விளையாடிக்கொண்டிருந்த மகனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் குமுதினி.பார்வையைத் தாண்டி மனமோ பற்பல எண்ணங்களில் தத்தளித்துக்கொண்டிருந்தது.கடந்த சில தினங்களாக தொலைக்காட்சியில் காட்டிய மேற்கத்தைய நாடுகளில் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட களியாட்டங்களில் ஈடுபடும் மனிதருக்கும் நமக்கும் தான் எத்தனை வேறுபாடு என்று அவள் மனம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தது.

2005 ம் ஆண்டு சுனாமியில் தொடங்கிய ஏழரை இன்னும் முழுமையாக நீங்கவில்லை.அன்று தகப்பன் கடலோடும், பின் மூதூர் சம்பூரில் தாயும் கணவனும் மல்டி பரல் செல் தாக்குதலில் மண்ணோடு மண்ணாகியும் போய்விட்டனர்.ஒரு காலத்தில் பென்சில் சீவும் போது விரலை வெட்டி விட்டு ஓவென்று கதறியவழுக்கு, இன்று கண் முன்னாடி உயிர் போனாலும் கண்ணீர் கசிய மாட்டன் என்கிறது.உடல் என்ற சிறையில் இருந்து உயிருக்கு விடுதலை கிடைத்து விட்டது.இதில் அழுவதற்கு என்ன இருக்கிறது என்பதே அவள் கட்சி.

“அம்மா,இஞ்ச பாரேன்! என் போட் எப்படி சூப்பரா போகுது எண்டு.என்ற மகனின் குரல் நினைவில் இருந்து மீட்டுவந்தது.கண்ணா,இஞ்ச வாடா,மழைத் தண்ணி பட்டு காச்சல் வந்திடப் போகுது என்றாள்.ஆனால் குழந்தையோ காகித ஓடம் மிதக்கும் லயிப்பில் இருந்து மீளவில்லை.அந்த நேரத்தில் அவள் எண்ணம் மீண்டும் பழைய புள்ளியிலே வந்து நின்றது.

முகாமுக்கு வந்த புதிது.யாருக்கு யார் ஆறுதல் சொல்லுவது என்ற நிலை.எல்லோரும் ஏதோ ஒருவகையில் இழப்பைச் சந்தித்து விட்டே அங்கு தஞ்சம் புகுந்திருந்தனர்.ஒரு வயதுக் குழந்தையை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு கியூவில் நின்று பாண் வாங்குவதில் இருந்து கொசுக் கடியில் கூட்டமாய் தூக்கிக் கொள்ளுவது வரை அந்த வாழ்க்கைக்கும் இசைவாக்கப் பட்டுவிட்டாள்.இத்தனைக்கும் கடந்த காலத்தில் பஞ்சு மெத்தையில் தலைமாட்டில் மின்விசிறி ,ரேடியோவுடனும் தூங்கியவள் அவள்.

மலசலகூடம் போகவேண்டும் என்றால் 5மணிக்கு முதல் போகவேண்டும்,இல்லாவிட்டால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அதற்கும் கியிவில் நிற்க வேண்டிய நிலைமை.அன்றொரு நாள் அதிகாலை மலசலகூடம் நோக்கிச் சென்றுச் சென்றுகொண்டிருந்தாள்.காவலுக்கு நின்ற காக்கிச்சட்டை டாச் வெளிச்சத்தை உடம்பை நோக்கி அடித்து.ஒற்றைச் சட்டையை ஒளி ஊடுருவ கூனிக் கொண்டே திரும்பினாள்.புரியாத மொழியில்,அசிங்கமாய் பேசி இருக்க வேண்டும்.உடல் உபாதையை உணர்வுகள் அடக்க மலசலகூடம் செல்லாமலே போய்ப் படுத்துவிட்டாள்.தூங்க முடியவில்லை,கண்ணீர்விடத்தான் முடிந்தது.

அதே (பொது மக்களின் நண்பன்) காக்கிச் சட்டை காலையில் வந்து தனது மகனுக்கு இனிப்பைக் கொடுத்துவிட்டு தன்னை ஓரக்கண்ணால் பார்க்க தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பிள்ளையின் கையில் இருந்ததைப் பிடுங்கி மண்ணில் போட்டு விட்டு பிள்ளையை இழுத்துக் கொண்டு திண்ணைக்குப் போய்விட்டாள்.

அன்றிலிருந்து எத்தனை சீண்டல்கள் அந்த காமுகனிடம் இருந்து.ஒருநாள் அழுது கொண்டே சொன்னாள்,உன் தாயை புத்த பெருமான்தான் படைத்து இருந்தால்,என்னையும் அவர்தான் படைத்திருப்பார்.என்னை அசிங்கப் படுத்துவதாய் நினைத்து அவரை அசிங்கப்படுத்தாதே”.

கடந்த மாதம் தான் மக்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்கு திரும்பி இருந்தனர்.மக்கள் நடமாட்டத்தால் அந்த மயான பூமியின் முகம் சற்றே மாறிக்கொண்டிருக்கிறது.அவளுக்கும் பழைய பாடசாலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாடம் நடத்தியது ஆத்மா திருப்தியை ஏற்ப்படுத்திருந்தது.

“ஐயோ அம்மா,என் ஓடம் தாண்டு போச்சம்மா! என்று அழுதவாறே தோள் குலுக்கிய மகன் மீண்டும் நினைவில் இருந்து மீட்டான்.மகனை அருகில் உட்கார வைத்து வாஞ்சையாக அவன் தலை முடியை வருடியவாறு,குஞ்சு இனி நீ அழக்கூடாதடா,பல ஜென்மத்துக்கு அனுபவிக்க வேண்டிய கஷ்டத்தை இந்த ஜென்மத்திலையே அனுபவிச்சிட்டம்.இன்னம் மிச்சமாய் இருக்கிற காலத்தை சந்தோசமாகக் கழிச்சுவிட்டு சாகணும்டா அன்றாள் குமுதினி அழுத்தமாக.

யுத்தத்தாலும் வன்முறையாலும் பாதிக்கப்பட்ட என் உறவுகளுக்கு புது ஆண்டு தன்னம்பிக்கையுடன்,மகிழ்ச்சியுடன் பிறக்க வாழ்த்துக்கள்.

6 comments:

Philosophy Prabhakaran said...

சில இடங்களில் கண்ணீர் விட வைக்கிறது... வேற என்ன சொல்வதென்று தெரியவில்லை...

விஜயகுமார் ஐங்கரன் said...

அருமையான பதிவு

Unknown said...

@Philosophy Prabhakaran

//சில இடங்களில் கண்ணீர் விட வைக்கிறது... வேற என்ன சொல்வதென்று தெரியவில்லை... //
சில நிஜத்தின் பிரதிபலிப்பு சுடத்தான் செய்யும்.
கருத்திற்கு நன்றி.

Unknown said...

@Ayinkaran
நன்றி.

ஸாதிகா said...

நெகிழவைத்த சிறுகதை.

Unknown said...

@ஸாதிகா
கருத்திற்கு நன்றி.

Post a Comment