அறைக்குள் இருந்து வெளிவந்த மயூரன் மணிக்கூட்டைப் பார்த்தான்.மணி 4 மணியைக்காட்டியது.பார்த்தது தான் தாமதம் டீசேர்டைக்கழற்றி கதிரையில் வீசிவிட்டு கிணற்றடியை நோக்கி ஓடினான்.அங்கே அவன் அம்மா பூ மரங்களுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தார்.போன வேகத்திலே வாளியைப்பறித்து முகத்தைக்கழுவினான்.”என்னப்பு விளையாடவா ? 6 மணிக்குள்ள வந்திடு.அப்பாட்ட நான் திட்டு வாங்கேலாடா “என்றாள் அம்மா.எந்தப்பதிலும் சொல்லாமல் வாளியைத் தடார் என்று போட்டு விட்டு ஓடிவிட்டான்.ஏனோ அம்மா லீலாவிற்கு அவனது துடிப்பான செய்கை கோபத்தை ஏற்ப்படுத்துவதில்லை.இப்பொழுது தானே 13 வயது.அந்த வயதுக்குரிய விளையாட்டுப் புத்தி.பயல் படிப்பில் வேறு நல்ல சுட்டி.
மயூரனின் வீட்டில் இருந்து நாலு வீடு தள்ளி பனைமரத்திடல்.அந்த வளவின் சொந்தக்காரர் அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்து விட்டார்.அவரது புண்ணியத்தால் அந்த சுற்று வட்டார பசங்களுக்கு ஒரு மைதானம் அமைந்து விட்டது.அந்த வளவில் 5 பனை மரங்கள்,ஒவ்வொன்றும் நல்ல உயரம்.பனை மரத்தின் தலைப் பகுதியை பார்த்தால் சிலிர்த்த முடியுள்ள சிங்கத்தின் முகம் போன்று மிரட்சியூட்டும்.இருட்டில் அதன் சலசலப்பே பையன்களை மிரட்டி வீடு செல்ல வைக்கும்.
மயூரன் திடலுக்குச் செல்லும் போது அணி பிரிப்பதற்காக டேவிட்டும் குணாலும் கால்வைத்துக்கொண்டு இருந்தார்கள்.குணாலின் பாதம் டேவிட்டின் பாதத்தைத்தொட்டது.சந்தோஷத்தில் கூச்சல் போட்ட குணால் மயூரனை தனது அணிக்காக முதலில் தெரிவு செய்து கொண்டு அவனைக்கட்டிப்பிடித்தான்.பின் இரண்டு அணிக்கும் தலா 6 பேர் வருமாறு பிரிக்கப்பட்டன.
டேவிட் ஒரு சிறு கல்லை எடுத்து தனது பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையே வைத்துவிட்டு கையைச் சுற்றி மாயவித்தை எல்லாம் காண்பித்து விட்டு குணால் முன்னாடி கையை நீட்டினான்.கையை நசித்து அவனது முக பாவனையை நோக்கியவாறு இருக்கு என்றான்.டேவிட் கையை விரிக்க கல் கீழே விழுந்தது.துள்ளிக்குதித்த குணால் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தனர்.
பனைமரத்தில் செங்கல் கொண்டு கீறப்பட விக்கெட் முன்னால் துடுப்பெடுத்தாட மயூரனும் மற்றைய பக்கம் தேவாவும் சென்றனர்.அந்த மைதானத்தின் விதிகள் ICC யிடம் இருந்து பலவகையில் முரண்பட்டது.புதியவர் யாரும் வந்தால் விதிகள் விளங்கப்படுத்த 5 நிமிடம் தேவை.வரதன் மாமா வீடு போனால் 2 ரன்ஸ்,வேலன் அண்ணன் வீடு போனால் அவுட் , இப்படிப் பல.( வரதன் மாமா பந்து போனால் எடுத்து கொடுப்பார்,ஆனால் வேலன் அண்ணன் வீட்ட போனால் புதுப்பந்து வாங்கணும்).
வழமை போல மயூரன் தான் தான் இந்த ஏரியா சச்சின் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான்.3 ஓவருக்கு 30 தாண்டிட்டு.மயூரன் 6 உம் 4 உம் எண்டு விளாச டேவிட் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.அப்பொழுது மயூரன் உயர்த்தி அடித்த பந்து பனையோலையில் உரசியவாறு சென்று எல்லைக்கு சற்று முன்னாள் கீழ் நோக்கி வர அதை அற்புதமாக தாவி டேவிட் பிடித்தான்.அவனது சந்தோசத்திற்கு அளவே இல்லை.அவனது அணியினர் அவனைத் தூக்கிக் கூச்சல் போட்டனர்.அப்பொழுது மட்டையைத் தூக்கிக் காண்பித்த மயூ “நாட் அவுட் “ என்றான்.”ஏன் ? “ என்று கத்தியவாறு டேவிட் அணியினர் ஓடிவந்தனர்.பந்து மரத்தில் பட்டது என்றான்.மயூ அணியினரும் ஆமா போட்டனர்.ஆனால் அடுத்து களமிறங்க தயார் ஆக இருந்த குணால் மௌனமாக இருந்தான்.
குணாலின் மௌனத்தை சாட்சியாக வைத்து டேவிட் மயூ கையில் இருந்த துடுப்பு மட்டையை பறிக்க முயல ,இருவரும் பரஸ்பரம் சட்டையை பிடித்துக்கொண்டனர்.மயூ அவனை நோக்கி “ அலாப்பி! கள்ளன்....” என்று கத்தினான்.
அப்பொழுது டேவிட் “போடா அனாதை ! ” என்றான்.யாருமே அந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை.அங்கே திடீர் என்று நிசப்தம்.சற்று நேரத்திற்கு யாருமே எதுவும் பேச வில்லை.
தொடரும்....
(கதையை இவ்விடத்தில் நிறுத்த எனக்கும் இஷ்டம் இல்லை,ஆனால் இவ்வளவு தூரம் பொறுமையாய் படித்த உங்களை இன்னும் சோதிக்கக் கூடாதல்லவா.விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்.)
1 comments:
நல்லா போகுது கதை... சீக்கிரம் அடுத்த பாகம் வரட்டும்....
Post a Comment